குறுங்கதை : ஆப்ரேசன் ஐந்தாறு அறுநூறு
மனம் துளியளவும் மாறிட விடக் கூடாது. சிந்தனை சிதறவும் கூடாது. நடுங்கத் தொடங்கியிருந்த கைகள் இன்னும் அதன் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. எண்ணத்தை ஒரு நிலைப்படுத்த முடியாத நிலையில் மதுவை விட வேறென்ன தனக்குத் தோதாக முடியும் என நினைத்து அந்த பள்ளி அறையிலிருந்து வெளியேறினான் மேஜர் டெர்ரன்.
மதுக்குப்பிலிருந்து திரவியத்தை கிளாஸ்சுக்கு மாற்றி நடுங்கிக் கொண்டிருந்த தன் விரல்களால் ஏந்தினான். அதன் நடுக்கம் குறையவில்லை. அவனது ஆழ் மனத்தில் எழுந்துள்ள சிறு பயத்தின் தாக்கமே இந்த நடுக்கம். மேஜருக்கு ஆனையிடப்பட்டுள்ள பணியைச் செய்து விட்டால் அவனது பெயருக்கு முன் கர்வம் வேரூன்றி நிற்கும். தோள் பட்டையை பல்வேறு நட்சத்திரங்கள் அலங்கரிக்கும். கூடுதல் மரியாதையும், சன்மானங்களும் நிறைந்திருக்கும்.
மதுவிற்குள் இவையனைத்தும் காட்சிகளாக ஓடின. விரல்களின் நடுக்கம் கொஞ்சம் ஓய்ந்தது. ஆனாலும் பணியைச் செய்ய துணிச்சல் வரவில்லை. கிளாசுக்கு அந்தப் புறமாக காஸ்ட்ரோவின் உருவமும் வந்து வந்து போனது.
இந்தப் பணிக்குப் பிறகு தனிமனித சுதந்திரம் தொலைந்து போகலாம். மேஜரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அடிக்கொரு நோடியில் மரண பீதியில் வாழ நேரிடும். புரட்சி புயல் காற்றாய் வீசும். சாமானிய மக்களின் பார்வைக் கூட உள்ளுக்குள் அச்சத்தை உண்டாக்கும்.தோட்டாக்கள் ஆறு. ஒன்றை பாய விடக் கூட துணிச்சலுக்கு எங்கே செல்வது?
மீசையை முறுக்கினான் மேஜர் டெர்ரன். கம்பீரமும் ஆவணமும் கொஞ்சம் தலைக்கேறியது. இனியும் சிந்திக்க வழிவிட்டுக் கொண்டிருந்தால் பொலிவியா அரசாங்கத்தின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்த மேஜர் டெர்ரன் மதுவை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டான். முதல் குவளையில் காஸ்ட்ரோ காணாமல் போனார்.
அடுத்த கலவை உள்ளே இறங்குவதற்குள் வீரியம் பீறிட்டுக் கொண்டு வந்தது. பக்கத்து அறையை நோக்கி விரைந்தான். துணிச்சல் அவனை முழுமையாக ஆட்கொள்ளவில்லை. கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையிலும், உடல் முழுவதும் காயங்கள் மோசமாக இருந்த போதிலும் எர்னஸ்டோ எழுந்து நின்று மேஜரின் பணிக்கு வழிவிட்டார். மேஜரின் தயக்கம் தெடர்ந்து கொண்டே இருக்க எர்னஸ்டோவைக் காண முடியாமல் முகத்தைத் திருப்பி கையிலிருந்த துப்பாக்கியால் ஆறு குண்டுகளை வெளியேற்றினான். அந்தப் பள்ளிக் கூடத்தின் அத்துணை மூலைகளிலும் புரட்சியின் கைகள் ஓய்ந்த ஒலி கேட்டது.
புரட்சியின் உச்சம், ஏகாதிபத்தியத்தின் எதிரொலி தரையில் சரிந்தது. கிழிந்த ஆடையில், கிழிந்த காலணியில், புரட்சியின் நிறத்தில் சகாப்தம் ஒன்று தன் இறுதி மூச்சை நிறுத்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக