சிறுகதை : சதுரங்கம்


 

எத்தன தடவ சொல்லிட்டேன் யெடத்தை மாத்துனுஒன் மர மண்டையில எங்காவது ஏறுதா…”

சரசு வாயிலிருந்து வார்த்தைகள் தினமும் கேட்கிற ஒன்றுதான்  என்பதை அறிந்தவனாக காதில் விழுந்தவற்றில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தன் ஹோண்டா மோட்டாரை மண் சாலையில் செலுத்திக் கொண்டிருந்தான் ஆதி. பத்து வருட பயன்பாட்டில் இருந்திருக்கக் கூடிய  மோட்டார்

அது. உரியரிடமிருந்திருந்தால் இன்னும் கொஞ்ச காலத்திற்கு உழைக்கும்.

ச்சே…”

மோட்டார் கொஞ்சம் ஆட்டங்காணவே அதன் தலையில் உள்ளங்கையால் தட்டினான். இரு விரல்களுக்கு நடுவிலிருந்த  சிகரெட்டிலிருந்து புதைந்து கொண்டிருந்த தழல்கள் சட்டென்று மாயமாய் மறைந்தன.

யோவ், காதுல விழுந்தாலும் கேட்காதவன் போல நல்லாவே நடி…”

என்றவள் கையால் அவனது தலைக்கவசத்தில் தட்டினாள். மனத்திற்குள்

எடுப்பட்ட நாயேநாசமா போறவனே…”

என்று முணுமுணுக்கவும் செய்தாள் சரசு. தலைக் கவசத்தில் விழுந்த அடி சுர்ரென்று ஆதிக்குத் தலைக்கேறியது. ஆனாலும், அக்கோபத்தை அடக்கியவாறு கும்மிருட்டு சூழ்ந்திருந்த அந்தப் பாதையில் கண்களை உருட்டித் திரட்டி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். மோட்டாரின் வெளிச்சம் நாளுக்கு நாள் மங்கிக் கொண்டு போயிருந்தது. புதிய விளக்கை மாற்றலாம் என்றாலும் அந்தச் சிறிய பட்டணத்தில் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம்தான் வேலுவின் வாகனம் பழுது பார்க்கும் பட்டறை உள்ளது. அங்கே போனால் அபாங் அபாங் என்று கொஞ்சியவாறே காரியத்தை இலவசமாகச் சாதித்துக் கொள்ளலாம். அதற்கும் வழியில்லை. அதோடு வேலு அந்தப் பட்டறையைத் திறக்க முன் பணம் நீட்டியவனும் ஆதிதான். எங்கும் இலவசமாகாதா என்பதுதான் இன்றைய அவனது நெருக்கடி.

செம்மண் சாலை என்பதால் தூசுகள் தெறித்த வண்ணமாகவே இருந்தன. வாகனத்தைக் கொஞ்சம் அழுத்தினாலும் தூசு மண்டலத்திற்குள் நுழைந்தாற் போலாகிவிடும். மழைக்காக காத்துக் கிடக்கிறது செம்மண் சாலை. முகத்தை மறைக்கக் கண்ணாடி இல்லாத கவசமது. இறுக்கிக் கட்டிக் கொள்ள வாரும் இல்லை. தூசுகள் அவ்வப்போது முகத்தில் ஒட்டிக் கொண்டன. ஆதியும் அவ்வப்போது முகத்தைத் தேய்த்தவாறும், மூக்கை மூடியவாறும் மோட்டாரைச் செலுத்தினான்.

மெதுவாதான்…’

இடையில் ஒரு தும்மலோடு..

“..போய்த் தொலையே‌ன்…”

சரசு சொல்லி முடிப்பதற்குள் மோட்டார் வண்டி சாலையில் கிடந்த ஒரு கல்லில் மோதி ஆட்டங்கண்டு விழுந்தது. அந்தக் கும்மிருட்டில் யார் எங்கே விழுந்தனர் என்பதைக் கூட உணர முடியவில்லை. மோட்டார் அவர்களது மேல் விழுந்தது. ஆதி தன் வலது காலை மண்ணில் ஊன்றி அழுத்தமாக்கிக் கொண்டதால்தான் சட்டென்று விழாமல் கொஞ்சம் தள்ளாடி விழுந்தனர்.

….அம்மாடேய் வீணாப் போனவனே இப்படியா ஓட்டுவ…”

சரசுவின் வலது கால் மோட்டார் டயரில் சிக்கிக் கொள்ள இடது கால் தொடை வரை அணிந்திருந்த பாவாடை மேலேறிக் கொண்டது. சரசுவின் ஒரு கை‌ ஆதியைப் பிடித்திருக்க மறு கை  வயிற்றைக் காத்து நின்றது.  

ஆதியின் இருகால்களும்‌ மோட்டாரின் அடியில் சிக்கியிருந்தாலும் பதற்றத்தில் எழுந்த ஆதி வேகமாக மோட்டார் வண்டியைத் தூக்கி நிறுத்த முயன்றபோது கம்பிகளுக்கு நடுவில் மாட்டியிருந்த கால் விரல்கள் வலியை அதிகப்படுத்தின. மோட்டார் சரியாக நிற்க முடியாமல் அந்தப் பக்கமாக மீண்டும் விழுந்தது. அதை அவன் கண்டு கொள்ளவில்லை. அவனது காலின் கட்டை விரல் கூரான கல்லில் தேய்த்து பிளந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சட்டைப் பையிலிருந்த கைப்பேசி அலற ஆரம்பித்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. அந்த அழைப்பு மிக அவசியமானது என்றாலும் இப்போதைக்கு அவனுக்குச் சரசுதான் முக்கியமாகப் பட்டாள். கைப்பேசியை எடுத்து விளக்கைத் திறந்தான். அவன் தலையிலிருந்த தலைக்கவசம் பூட்டப்படாததால் சாலையோரம் இருந்த புதரில் போய்ச் சேர்ந்திருப்பதை உணர்ந்தான். முறையான தலைக்கவசத்தை அணியாத சரசுக்கு அதிர்ஷ்டவசமாக தலையில் அடியேதுமில்லை‌. வலது கையின் முட்டியில் தேய்ந்து போயிருந்தது.

மனுசனடா நீ

சரசுஉனக்கு….”

சற்று யோசித்தவாறு

“..வயித்துல ஒன்னும் ஆகலையே…”

ஆதி பதற்றத்தோடு கேட்க கேட்க அவளிடம் முணகல்  பதிலாக வந்து கொண்டிருந்தது. அவளைத் தூக்கி நிமிர்த்தி உட்கார வைத்தான் ஆதி. கையிலிருந்த கைப்பேசியின் ஒளி இங்கும் அங்குமாய்த் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அவ்வொளி வயிற்றில் படரும் போதெல்லாம் ஆதியின் கண்கள் வயிற்றையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன. அவளால் முதுகை நிமிர்த்தி உட்கார முடியாத நிலையில் இடது கை மண்ணில் சாய்த்து ஒருக்களித்துக் கொண்டாள். விரிந்திருந்த அவளது இரண்டு கால்களையும் ஒன்றினைக்க முடியாத நிலையில் சோர்ந்து போயிருந்தாள். ஆதி சரசுவின் அருகில் அமர்ந்தவாறு வலது தொடையின் கீழ்ப்பகுதியைத் தடவி தன் விரல்களால் எதையோ தேடினான். அடுத்த கணம் விரிந்திருந்த அவளது வலது காலின் தொடையைத் தடவுவதைப் போல கையை நகர்த்தினான். சரசு அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பின்வாங்கிக் கொண்டான்.

ஆதியின் கைகள் அவளது வயிற்றைத் தடவிப் பார்த்தன. விளக்கை அவளது முகத்தின் மீது திருப்பினான். சரசுக்கு வந்த கோபத்திற்கு கைகளைத் தட்டி விட்டாள். கைப்பேசி கீழே விழுந்து மீண்டும் இருள் சூழ ஆரம்பித்தது.. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வயிறும் நெஞ்சும் மேலேறி கீழிறங்கின சரசுக்கு.

இதுக்குத்தான் நான் அப்பவே இதெல்லாம் வேணாம்னு சொன்னேன்…”

பளார் என்று ஓரறை. அடங்கிப் போயிருந்த மோட்டார் வாகனத்திற்குப் பதிலாக இவ்விடத்தில் தெளிவாக கேட்ட சத்தமது. தன் கோபத்தை நிகழ்த்தவே முதுகை நேராக நிமிர்த்துக் கொண்டவளுக்கு வாங்கிய அறையை அதே நொடியில் திருப்பிக் கொடுத்தான்  ஆதி.

கன்னம் தாண்டி தோள்பட்டையில் விழுந்த அடி சரசுவின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

இதை நான் கேட்டேனாஉனக்கு இதுல‌ பங்கே இல்ல பாருவாங்கி வாங்கி ஒன் போகெட்டுக்குள்ள சொருவிக் கிட்டேயே அப்ப எங்கடா போனுச்சு ஒன் புத்தி… ‘கண்டவனோட' பாவத்த நான் சுமக்கனுமா என்று தன்‌ ஆள்காட்டி விரலைக் காட்டி வயிற்றை சாபமிட்டு ஓய்ந்தாள்.

என்னலா‌ சாயாங்இப்படி சொல்லிக் காட்டுற…”

என்று ஆதியின் முகம் கோபத்திலிருந்து அன்புணர்வுக்கு மாறுவதாக ஒரு பிம்பத்தை அங்கே நிகழ்த்திக் காட்ட வேண்டி அவளது தோளினை இறுகப் பற்றிக்‌ கொண்டான். வெறுமையாய்க் கருமையை நிரப்பிக் கொண்டிருந்த அவளது கழுத்தைத் தடவிக் கொண்டான். கோபத்திலிருந்தவள் கொஞ்சம் சிணுங்கி சாந்தமானாள்.

வா சரசுவீட்டுக்கு போவோம் என அவளைத் தூக்கி விட்டான். அவளது பாவாடையின் தூசிகளைத் தட்டி விடுவதாக பின்பக்கம் பார்த்து திருப்திக் கொண்டான். வலது கையை வயிற்றில் தற்காத்துக் கொண்டே எழுந்து பாவாடைச் சரிசெய்து கொண்டு மோட்டாரில் அமர்ந்தாள் சரசு. காயப்பட்ட கை கொஞ்சம் வலிக்கவும் செய்தது.

ஆதிக்குள் ஓர் மௌனம் நிகழ்ந்து களைந்து தொலைந்து வாய் விரிந்து புன்னகை மலர்ந்து சட்டென்று காணாமல் போனது. பின்னால், அமர்ந்திருப்பவள் சரசுவாக தெரியவில்லை,  எதிர்காலமாக விரிந்திருந்தாள்.

பரபரப்பான‌ பெருநகர் பகுதியில் வற்றாத கூட்டத்திற்கு நடுவே தனித்துவமாய்க் காட்சியளித்தவள் சரசு. அன்றைய நாளை தன் வாழ்நாளின் சொர்க்கமாகவே நினைத்திருந்தான் ஆதி. பல மொழிப் பேசும் மக்களுக்கு நடுவே அவளது அடர்ந்து கிடந்த மௌனம் தனித்து காட்டியது. கால்கள் ஓயாத நடைகள் நிறைந்த குறுகிய பாதையது. நடுசாமம் என்பதை அறியப்படக் கூடாது என்பதற்காக   வண்ண வண்ண விளக்குகள் மிளிர்ந்த பகுதியது. வான வேடிக்கை போலவே விளக்குகள் வண்ண வண்ணமாய் மாறிக் கொண்டிருந்தன. ஒரு குட்டிப் பகலைக் காட்டியிருந்த நடுசாமம் அது.

லாய் லாய்மாரி சினி மாரி சினி…”

செவிகளுக்குள் ஓயாத ஒலிகள்.  ஒருவரையொருவர் அவ்வப்போது இடித்துக் கொண்டு நடந்தாலும், கைககள் தவறுதலாகவோ, தவறுக்காகவோ பட்டும் படாமலும் கண்டுக் கொள்ளாத மனங்கள் நிறைந்த இடமது. மூக்கைத் துளைக்கும் உணவின் வாசணைகள். சாப்பிட்டு முடித்த மறுகணமே மேசைகள் காலியாக்கப்பட காத்திருந்த கைகள். ஆர்டர் கொடுத்த உணவுகள் கண்களை மட்டும் அலங்காரம் செய்து விட்டு சிரித்துச் சிரித்துப் பேசும் கும்பல்களுக்கு நடுவே மணத்தைப் பரப்பிவிட்டு காத்திருந்து எச்சம் போலாகி வலிந்து கிடந்தன பாத்திரம் கழுவுமிடத்தில் . தேவலோகத்தில் இருப்பது போலவே அவ்வப்போது வந்து வந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடிடும் வெண்ணிற புகைகள். முட்டி மோதும் அகப்பையும், கரண்டிகளும் தங்கள் பங்கிற்கு இடித்துத் தள்ளும் ஓசைகள். ஒரு புறம் கடை  வரிசையென, மறுபுறம் வீடுகள் என அடையாளப்படுத்தப்பட்டிருந்த சின்ன சின்ன அறைகளைப் போன்ற வரிசைகள். எல்லாப் பசிகளுக்கும் உகந்த இடமாக. அந்த சிறிய மாய உலகம்.

இத்தனைக்கும் நடுவே ஒரே கருப்பின பெண்ணாக கால் மேல் காலிட்டு அருகிலிருந்த நாற்காலியில் இடது கையை சொகுசாக சாய்த்து வலது கையில் சிகரெட் துண்டுகளை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தாள்  தேவதையாகத் தெரிந்த சரசு. பல வெள்ளைத் தோல்கள் படர்ந்திருந்த வெளிச்சத்தில், பல வித உலக வாசனைத் திரவியங்கள் குழுமியிருந்த கூட்டத்தில் சரசுவை எளிதில் கண்டு கொள்ள முடிந்ததே அவளது நிறமானாலும் காந்த விழியுடையாள் அத்தனை பேரழகியாகயிருந்தாள். தேகமெங்கும் தெரியும் அளவில் சிறு கயிறு தோள் பட்டையைத் தாங்கிக் கொண்டிருக்க,  தொடைகள் மறைக்க முயலாத  குட்டைப்  பாவாடையும், கருத்த நிறத்து நீண்ட காலுறைகளும் அவளை ‌ஒரு மாடலாகக் காட்சிப்படுத்தியது. கண்களுக்குத் தேவைக்கு அதிகமான கண்மையிட்டு உதட்டிற்கு இருமை நிறத்திலான சாயத்தைப் பூசிக் கண்கள் மயங்கி நிற்கும் அளவிற்கு கவர்ச்சிகரமாகத் தெரிந்தாள். பல அந்நிய பெண்கள் சிவந்த மேனியில் வட்டமிடும் அந்த இரவிற்குள் சரசு மட்டும் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தாள். வரைகின்ற ஓவியத்திற்கு நிறவேற்றுமை எவ்வளவு அவசியம் என்பதை கருப்பினழகின் பின்புலமாக வெள்ளை நிற விளக்குகள் சாத்தியப்படுத்திக் கொண்டிருந்தன. சரசுவின் சிறுத்த இடையை, மூங்கில் போன்ற தோள்களை, விழியின் மருட்சியைத் தூரத்திலிருந்தே புலப்படுத்தியது.

ஆதிக்கு அனைத்து மதுபானங்களும் அத்துப்படி எந்தவித மதுபானமும் மூடியைத் திறந்ததும் நுரை பொங்கிக் கொண்டு உள்ளிலிருக்கும் கரியமில வாயுவை வெளியே தள்ள துடித்துக் கொண்டிருக்கும். அதே போலத்தான் அன்றைய நிலைமையும். தன் மேசையின் மீதிருந்த மதுபானத்தை உள்ளே இறக்கி புத்துணர்ச்சியை வரவழைத்துக் கொண்டான்.

மற்றுமொரு பீர் போத்தலோடு சரசு முன் அமர்ந்தான் ஆதி. சரசுவின் வெண்புகையில் அவளது கண்களையே நோட்டமிட்டுக் கொண்டிருக்க, அவள் மேசையின் மீதிருந்த பீர் போட்டலை எடுத்து தொண்டைக்குழி ஓயாத வரை குடித்து தீர்த்து வாயின் ஓரத்திலிருந்து நுரையைத் தன் ஆள்காட்டி விரலால் துடைத்து பெருவிரலால் தெறிக்கவிட்டதில் அது ஆதியின் கண்ணில் பட்டது. இருவருக்குள்ளும் நிகழ்ந்த மௌன போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நாற்காலியிருந்து எழுந்தான் ஆதி. அவளிடம் கண்களால் பேசிவிட்டு நகர விரைந்தப் போது அவனைப் பின்தொடர்ந்தவள் இன்றும் தொடர்கிறாள். பெருநகரின் உச்சத்திலிருந்து படிப்படியாக கீழிறங்கி வந்து விட்டாள்.

ஒரு வழியாக வீடு என்று சொல்லிக் கொள்ளக் கூடிய அந்த இடத்தை வந்தடைந்தான் ஆதி. குலுங்கி குலுங்கி வந்ததில் சரசுக்கு உடலெங்கும் வலி மிகுந்திருந்தது. மோட்டாரை நிறுத்தியவன் சரசு மெல்ல இறங்குவதற்கு‌க் காத்திருந்தான். மோட்டார் விளக்கை அணைக்கும் முன்னர் வீட்டின் விளக்கைத் தட்டி விட்டான். வெள்ளை நிற பல்ப். பிரகாசமாக எரிந்தது. ஆனால், ஆதி வெளிச்சத்தின் அளவை குறைத்து வைத்தான். உள்ளே நுழைந்ததும் குப்பென்று வாடை. பூட்டிக் கிடக்கும் அந்த அறையிலிருந்து என்றுதான் அறிவான் ஆதி.

உடைந்து போன நாற்காலியில் சாய்ந்தாள் சரசு. அடுத்த கணமே நாற்காலியில் படக்கென்று ஒரு சத்தம். அவளால் எழுந்திருக்க முடியாமல் அப்படியே கிடந்தாள்.

பழைய துணிகள் நிறைந்திருந்த வீடு. ஆட்டங்கண்டுப் போயிருந்த மின்விசிறி திறந்தாலே கட கட வென ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. கழிவறையிலிருந்து சிறுநீர் வாடை மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது.

சரசுவால் எதையும் பொருட்படுத்த இயலவில்லை. அவளது கை வயிற்றின் மீதே இருந்தது.   வாங்கி வந்த தேநீர் செம்மண் சாலையில் கறைந்து போனது. ச்சார் கொய்தி யோவை வாயில் போடும் அளவிற்கு அவளுக்கு உடம்பில் தெம்பில்லை. உடல் வியர்த்துக் கொட்டியது. கால்களை ஒன்றிணைக்க முடியாமல் விரித்த நிலையிலே முனுகிக் கொண்டிருந்தாள். இடுப்பில் பாறையை வைத்தது போல உணர ஆரம்பித்தாள். முதுகை மேல் இழுத்து கொஞ்ச நேரம் மூச்சைப் பிடித்துக் கொண்டதால் வலி குறைந்தது. எவ்வளவு நேரம்தான் மூச்சை உள்ளிழுப்பது. அவளால் உடலிலிருந்து ஏதோ ஒரு திரவியம் போல  வெளியேறுவதை உணர முடிந்தது. பிட்டத்தை நகர்த்த இயலாதவளாக சிணுங்கிக் கிடந்தாள்.

தி..தி…”

வெளியே இருந்த ஆதிக்கு அவள் அழைப்பது காதில் விழுந்திருந்தாலும் பொருட்படுத்தாது சிகரெட்டை ஊதித் தள்ளினான். சிறிது நேரம் கழித்து,

சரசுஎன்னமா ?...”

மீண்டும் அதே அழைப்பு கைப்பேசியில். உள் நுழையாமல்  சற்று தூரம் தள்ளிப் பேசினான். பற்ற வைத்திருந்த சிகரெட் முடிந்தும் அதை வீசியெறிந்து கைகளை அசைத்து கோபத்தின் தனலைக் குறைக்க பற்களைக் கடித்தவாறு பேசிக் கொண்டிருந்தான். அந்த இருட்டில் அவனது கைப்பேசியின் வெளிச்சம் மட்டுமே உருவத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.

வீட்டினுலிருந்து சரசு கையசைத்து அழைத்தைக் மீண்டும்‌ கவனித்து

சொன்னபடி வரும்நடக்கும்மூடிக்கிட்டு போன வைச்சுருசெம காண்டுல இருக்கேன்….…. “

வீட்டினுள் நுழைந்தான். சரசுவின் முகம் அயர்ந்து போயிருந்தது. நிமிர்ந்து உட்கார முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் கை ஜாடை காட்டியதை எடுத்துக் கொடுத்தான்.

வேணாம்..சரசுவலிக்குதுனு போட்டுக்காதஎதாச்சும் ஒன்னுக்கெடக்க ஒன்னு ஆனா எல்லாம் சொதப்பிடும்ஆஸ்பிட்டல் பக்கமே போக முடியாதுபுரிஞ்சுக்கோ….’

எச்சரித்தான். அவள்‌ தன் வலியை மட்டுமே முன்னிலைப் படுத்தியிருந்தாள். தடுத்தவன் அந்த ஊசியை வீசிவிட்டு  டிகேபாம் எடுத்து அவளது கைகால்களில் பூசத் துவங்கினான். சரசுவின் உடல் முழுவதும் வியர்வையால் ஈரமாகிக் கொண்டிருந்தது. எண்ணெய்ப் பசை ஈரத்திற்கு மேலே வெளிவரத் துவங்கியது. மூச்சு திணரும் ஓசையும் கேட்டது. அணிந்திருந்த பாவாடையும் ஈரமாகத் துவங்கியது. சரசுவால் உட்கார முடியாமல் உடலைச் சாய்த்துக் கொண்டே இருந்தாள். சற்று தயங்கியவாறே

சரசுஒரு மாதிரியா இருக்கஎன்ன வாடை இதுபுதுசா இருக்கு….”

“…திஆஸ்பிட்டல் போகனும்….”

அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது எளிதான ஒன்றல்ல என்பதை அறிவான். சரசுவிடம் தடுத்துப் பேசிக் கொண்டே காலத்தைக் கடத்த முயன்றான். சரசுவும் தன் நிலையை முன்னிறுத்தி வலியோடு போராடவும் துணிந்தாள். வாக்குவாதங்கள் முற்றிப் போக ஆதியின் சிகரெட் பேக்கேட்டும் தீர்ந்து போனது.

இதோ பாருவெளில ரோட் புளோக்….ஒன்னும் செய்ய முடியாதுபச்சியம்மா கிழவியை வேண்ணா கூட்டிட்டு வரேன்அது வரைக்கும் வயித்துல உள்ளதை பார்த்துக்க….எலவு எடுத்தது..ஒழுங்கா வந்து பொறக்குதோ இல்லையோஎன்ன பதில் சொல்லப் போறேனோ…”

சற்றும் காத்திருக்காமல் வீட்டின் பின்பக்கமாய் இருந்த கைவிடப்பட்ட வீடமைப்பு பகுதிக்குள் நுழைந்தான். பாதியிலே கைவிடப்பட்டதால் செடிகொடிகள் கட்டிடத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. குறுகிய பாதை வழியில் ஒரு கம்பத்தை வந்தடைந்தான். தூங்கிக் கொண்டிருந்த பச்சையம்மாள் கிழவியை வற்புறுத்தி அழைத்துச் சென்றான். வழிநெடுகிலும் அக்கிழவியின் புலம்பல் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அடக்கிக் கொண்டு கிழவிக்கு வழிக்காட்டிக் கொண்டிருந்தான்.

வீட்டை நெருங்குவதற்குள் சரசுவின் முணுகல் அதிகம் கேட்க ஆரம்பித்தது. பச்சையம்மாள் கிழவி வீர்கொண்டு ஓடினாள். உடைந்த சோபாவிலிருந்த இருந்த சரசுவின் பாவாடை முழுவதும் ஈரமாகி இருந்தது. முகமெல்லாம் வீங்கிக் கிடந்தது. குடம் உடைந்து வெகுநேரமாகியிருந்ததை உணர்ந்தாள் கிழவி. சரசு கிழவியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். கண்களில் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் நிரம்பி வழிந்திருந்தன.

சரசுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்து அதில் ஆதி உறுதியாய் இருந்தான். வெளிச்சத்தை அதிகப்படுத்தவும் கைவிரித்தான்.

ஒரு வாளி தண்ணியும் மாத்து துணியும் கெடக்குமாஅதுவும் இல்லனு சொல்லிடாதபோய்க்கிட்டே இருப்பேன்…”

கிழவி இந்த முறை ஆவேசமாகப் பேசினாள். சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்த ஆதி அவள் கேட்டதைக் கொடுத்து விட்டு வாசற்கதவைத் தாண்டி நின்றுக் கொண்டான். சரசுவின் முணகல் ஓய்ந்த பாடில்லை.

இந்த விடியலோடு இவள‌ தல முழுகனும்… “

மனத்திற்குள் வக்ரத்தோடு காத்திருந்தான் ஆதி. பச்சையம்மாள் கிழவி சரசைக் கீழே படுக்க வைத்தார். இருபக்க இடுப்பிற்கும் துணிகளை மூட்டையாகக் கட்டி சரசு கைகள் வைப்பதற்கு வசதியாக்கிக் கொடுத்தார். கால்களை விரிக்கச் சொல்லி கால்கள் நகராதவாறு துணி மூட்டைகளைத் தடுப்பாக வைத்து தரையிலும் துணியை விரித்தார். சரசுவின் அடிவயிற்று வரை வயிற்றில் கையை வைத்து அழுத்திப் பார்த்து சிசு சரியான இடத்தில் இருப்பதை உறுதிச் செய்துக் கொண்டார். சிசு வயிற்றில் அசைவதை உணர முடிந்தது.

அம்மாடி, இனியும் தாமதிக்கக் கூடாதுஒன் ரெண்டு கையையும் வைத்துல வைச்சி மூச்சை இழுத்து முக்குதல எட்டிப் பாக்கற நேரம்தான்……”

கையில் பட்டிருந்த காயம் ஒரு பக்கம் எரிச்சலைத் தர அதையும் பொருட்படுத்தாமல் கிழவி சொன்னதை செய்யத் தட்டுத் தடுமாறினாள் சரசு. முக்கும் போதெல்லாம் வலி உயிரைத் தின்றுக் கொண்டிருந்தது. பச்சையம்மா கிழவி அவளது இரு கால்களையும் பிடித்துக் கொண்டாள்.

முக்கு தாயிதல வெளிய தெரிய ஆரம்பிக்குது

அவளது கண்களில் நீர் வழிய வழிய தப்பா போகாதடி என்று தன் காலைப் பிடித்தத் தாயை உதறிய காட்சி கண் முன் நின்று வலியை அதிகரித்தது. அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

வெளிய வந்துடுடா…”

அதிகாலைப் பொழுதான வேளையது.

தாயி..முக்குறதை விட்டுறாதசெய்டா மாகுழந்தை வெளி வரப் போகுது டாதல நல்லா தெரிதுடாஇன்னும் கொஞ்சம் அழுத்துமா…”

வாடகை காரில் ஏறும் தருணம் அவளது தாய் சொன்ன கடைசி வார்த்தை நல்லா இருடி ..” மீண்டும் சரசுவின் காதில் ஒலிக்க ஆரம்பித்தப் போது  முட்டிக் கொண்டு உள்ளே கிடந்த சிசு வெளியே எட்டிப் பார்த்தது.

பச்சையம்மா கிழவியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. சரசுவின் முணகலும் நின்று போனது. வெளியில் நின்றிருந்த ஆதியும் சன்னல் வழியே எட்டிப் பார்த்தான். கிழவியின் கையில் அசைகின்ற ஓர் உயிர். கருப்பா சிவப்பா என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவனது தேவை அதுவல்ல.

அந்த இடத்தில் திருப்பிடித்த கத்தரிக்கோல்தான் இருந்தது.

ஆத்தா காப்பாத்து

என்றவாறு கிழவி தொப்புள் கொடி உறவை அறுத்தாள். சிசுவை சுத்தப்படுத்தினாள். நஞ்சுப்பையை ஒரு நெகிழியில் போட்டு ஆதியிடம் கொடுத்து மண்ணை ஆழமாக தோண்டிப் புதைக்கச் சொன்னாள். கொஞ்ச தூரம் நடந்து சென்ற ஆதி நாய்கள் நிறைந்த இடத்தில் அதை தூக்கி எறிந்த விடயம் கிழவிக்குத் தெரியாமல் போனது.

அவ உடம்பு நல்லா இல்..”

போதும் நிறுத்துகெளம்பு…”

பாக்கெட்டில் கையை நுழைத்தப் போது இருபது வெள்ளிதான் இருந்தது. அதை கிழவியிடம் வீசிய போது அவள் ‌வாயடைத்து நின்றாள். தொடர்ந்து கிழவி பேசிவிடக் கூடாது என்பதிலே குறியாய் இருந்த ஆதி, கிழவியைத் தள்ளிக் கொண்டே சில தூரம் வந்து சேர்ந்தான். கண் கலங்கிய பச்சையம்மாள் கிழவி கனத்த மனதுடன் தள்ளாடிப் போய்ச் சேர்ந்தாள்.

கைப்பேசியில் மீண்டும் பேசத் துவங்கி வீடு வந்து சேர்ந்தான். சரசு மயக்கத்தில் இருந்தாள். சிசு அழுக்குத் துணியால் சுத்தப்பட்டிருந்தது.

சிசுவைத் தொட்டுக் கூடப் பார்க்க மனமில்லாதவனாய் வெளியே நின்றிருந்தான். ஆதியின் மனம் அமைதிக் கொள்ளும் போதெல்லாம் சரசுவின் வயிற்றைத் தடவிப் பார்த்து முத்தமிட்ட தருணங்கள் வினாடிகளாக கடந்து சென்றன. அந்த தருணங்கள் மீண்டும் மீண்டும் சிந்தைக்குள் நுழையாதவாறு தன் தலையைத் தானே தட்டிக் கொண்டே இருந்தான். மீண்டும் கைப்பேசியில் கத்த ஆரம்பித்தான். பரபரப்பு மட்டுமே அவனுக்குள் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

மண் சாலையைப் புடைத்துக் கொண்டு, தூசிப் பறக்க ஹைய்லெக்ஸ் வாகனம் வந்து நின்றது. உள்ளிருந்து இறங்கிய இரு இந்திய ஆடவர்களிடம் உள்ளிருக்கும் சிசுவைக் காட்டினான் ஆதி. அவர்களுள் ஒருவன் சிசுவைத் தூக்கும் வேளையில்‌ மற்றொருவன் தாய்லாந்து நாட்டிற்குத் தப்பிச் செல்ல ஆதிக்கு கடப்பிதழையும் , பணத்தையும்  கொடுத்தான். பணத்தைப் பெற்று போக்கேட்டில் சொருகும் போதும், தன்னைக் கடந்து சென்ற சிசுவை அவன் ஒரு போதும் கவனிக்கவில்லை. வாகனத்தில் ஏறும்போது சிசுவின் அழுகுரல் சத்தம் அன்பின் கதறலாகவே ஆதியின் காதுகளில் வலியை ஏற்படுத்தியது. விரைந்த வாகனத்தைக் கண் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கண்களின் ஓரத்தில் கடுகளவு நீர் வழிந்திருந்தது.

வாசற்கதவில் நின்றவாறு சரசுவைப் பார்த்தான். தரையில் அரை மயக்கத்தில் அன்பை நினைவூட்டியிருந்தாள்.

 “..ஆதிகாப்பாத்துடாவலிக்குதுடா… “

என்ன உள்ளேயே கொன்னுடுவாங்கடா…”

அன்பின் கதறலுக்கு முன் நமட்டுச் சிரிப்பிலிருந்த சரசுவின் முகபாவணையை இன்றளவும் ஆதியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தூக்குத் தண்டனைக்குக் காத்திருக்கும் அன்பை இனி காப்பாற்ற இயலாது. பத்து மாதங்களாக தலைமறைவான வாழ்க்கையிலிருந்து விடுபடும் நேரம் வந்து வந்து விட்டது ஆதிக்கு. பாடாங் பெசார் வரை சென்று விட்டால் பீ தோங் அவனை எல்லையைக் கடக்க உதவிடுவான்.

சரசு கை கால்களை அசைக்க ஆரம்பித்தாள். ஆதி மோட்டாரை முடுக்கினான். சற்றும் திரும்பிப் பார்க்கவில்லை. அங்கிருந்து மாயமாய் மறைந்தான்.


 

 சாயாங் அன்பு

அபாங் அபாங் அண்ணே அண்ணே

லாய் லாய்….மாரி சினி மாரி சினி வாங்க வாங்க..இங்கே வாங்க இங்கே வாங்க

ச்சார் கொய்தி யோ சீனர்களின் உணவு

ரோட் புளோக் போக்குவரத்து துறை அதிகாரிகளால் நடத்தப்படும் வாகனச் சோதனை

பாடாங் பெசார் மலேசியாவின் எல்லைப் பகுதி ( அருகாமை நாடு தாய்லாந்து )

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

சிறுகதை : சகாப்தம்