குறுங்கதை : விளைச்சல்

நூல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. வாசற்கதவோரம் மேசையென்பதால் வருவோர் போவோரெல்லாம் நூல்களை நோட்டமிடாமல் இல்லை. இலக்கிய நிகழ்வென்பதால் சுமாரான கூட்டம் வரும் என்கிற நம்பிக்கை இருந்தது.

மாணவர்களும் பெற்றோர்களும் அரங்கினில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாணவர்கள் ஓரேயிடத்தில் அமராமல் அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருந்தனர். இசைக்குழுவினர் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தனர். 

வாசற்கதவோரம் கடந்து செல்பவர்கள் நூல்களைக் கண்டும் காணாதவராய்ச் சென்றுக் கொண்டிருந்தனர். மாணவர்கள் அவ்வப்போது வாசற்கதவு வரை வருவதும் நூலின் அட்டைப் படத்தைத் தடவுவதும்,நூலைத் திறந்து பார்ப்பதுவுமாய் ,இருந்தனர். பெற்றோர்களை கையசைத்தால் எடுத்தப் நூலை அப்படியே மேசை மீது போட்டு விட்டு அரங்கத்தினுள் ஓடினர்.


நூலைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கலாம் என முனையும் போதெல்லாம் சட்டென்று அரங்கினுள் ஓடி விடுகின்றனர். வழக்கம் போல நிகழ்ச்சி தாமதமாகத்தான் தொடங்கியது. நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னுமும் வருகையாளர் பட்டியல் ஓய்ந்தப்பாடில்லை. ஒரு மணி நேரத்தைக் கடந்து விட்ட நிலையிலும் ஒரு நூல் கூட விற்பனையாகவில்லை. மனத்திலிருந்த நம்பிக்கை குறைந்தப்பாடில்லை. அந்த மேசைக்கு மாணவர்களது வருகையும் நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

ஓரிரு வினாடிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூல்கள் குறைந்திருப்பதை உணர்ந்தேன்.செங்குத்தாக வைத்திருந்த மூன்று நூல்கள் அவ்விடத்தில் இல்லை. என் கவனக்குறைவு என்பதை உணர்வதற்குள் மின்னல் வேகத்தில் ஒரு மாணவன் ஒரு நூலை எடுத்துக் கொண்டு அரங்கினுள் ஓடினார். அரங்கினில் எட்டிப் பார்த்தேன். மாணவர் மட்டும்தான் அமர்ந்திருந்தார். கொண்டுச் சென்ற நூலைக் காணவில்லை. பொறுமைக் காப்பதை விட வேறு வழியில்லை என்றிருந்தேன்.

அரங்கத்தை விட்டு வெளியே வந்த பெண்மணி ஒருவர் நேராக என்னைப் பார்க்க வந்தார்.
“ தப்பா எடுத்துக்காதீங்க…மகன் புக்க எடுத்துட்டு வந்துட்டாரு…எவ்வளவுனு சொன்னீங்கனா காசு கொடுத்துடுறன்…”
என்னிடம் பேசியவாறே மகனைப் பார்த்து முறைத்தார் அப்பெண்மணி. தொகையைச் செலுத்தி விட்டு மகனைத் திட்டிக் கொண்டே சென்றார். அம்மாணவனோ கையிலிருந்ந நூலைப் பார்த்து புன்னகைத்தவாறே சென்றான்.

கால் வலிக்க நின்று அரங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சி நேரத்திலும் சிலர் அரங்கத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி நெறியாளரோ இருக்கையில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுக் கழிக்குமாறு தாழ்மையான வேண்டுகோளாக விடுத்துக் கொண்டிருந்தார். அதைச் சிலர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

வெளியே வந்த மாணவிகள் சிலர் மீண்டும் நூல்களைத் தொட்டும் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தனர். மாணவி ஒருவர்

“ நான் மூனு புக்கு வாங்கிட்டேன் தெரியுமா? “

என்று தன் தோழிகளிடம் சொன்னபோது எனக்காகக் தூக்கிவாரிப் போட்டது.

“கொஞ்சம் தான் படிச்சேன்…கதை நல்லா இருக்கு…வீட்டுல போய்ப் படிக்க போறேன்…”

அம்மாணவிற்குப் பின்னால் நானிருந்தும் அவள் தோழிகளிடம் சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தாள். என் கண் முன் வருவதும் போவதுமாய் இருந்தாள். நிகழ்ச்சி முடியும் தருவாயில் அரங்கத்தில் மிகக் குறைவானவர்களே காணப்பட்டனர். வெளியே வந்து கொண்டிருந்தவர்களில் வெகு சிலரே நூல்களை வாங்கினர். சிலர் மாணவர்களது வற்புறுத்தலுக்காக நூல்களை வாங்கிக் கடிந்து கொண்டனர்.

மனத்தில் ஒரு வித கணத்தோடு நூல்களை பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தேன். மீண்டும் அதே மாணவி கண்முன் வந்து நின்றாள். நூல்களைத் திறந்து பார்த்து மூடி வைத்தாள். தன் தாயார் அழைத்ததும் அங்கிருந்து ஓடினாள்.

பலரும் வாசற்கதவோரம் கடந்த வேளையில் நூல்களின் மீது பார்வைகள் படாமலிருந்தன. அதே மாணவி வாசலைப் கடக்கும் போது காணாமல் போன மூன்று நூல்களும் அவளது கைகளில் பத்திரமாக இருந்தன. அவளது முகத்தில் எந்தவொரு சலனமுமின்றி என்னைக் கடந்து சென்றாள். என் மனமும் அவளோடு சென்றுக் கொண்டிருந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

சிறுகதை : சகாப்தம்