குறுங்கதை : இருமுனை

இரவெல்லாம் அவளுக்குத் தூக்கமில்லை. அம்மாவைப் பார்த்தாள். குறட்டை பலமாக இருந்தது. அம்மாவின் குறட்டையைப் பற்றி அவளுக்குத் தெரியும். படுக்கையை விட்டு எழுந்தாள்.
மனத்திற்குள் பயம் சூழ்ந்திருந்தது.

இருட்டாக இருந்த அறையில் கதவின் கீழ்ப்பகுதியில் மட்டுமே வெளிச்சம் கொஞ்சம் மீட்டிருந்தது. அந்த சிறிய பாததங்களின் ஓசை தாயின் காதிற்குக் கேட்கப் போவதில்லை. நான்கு கால் பிராணியாகவே மாறிவிட்டாள். பதுங்கி பதுங்கி நகர்ந்து கதவு வரை வந்து சுவற்றைத் தடவி கதவின் பிடியில் கையை நகர்த்திக் கொண்டாள் அவள்.

மீண்டும் திரும்பித் தாயை ஒரு முறை நோக்கினாள். இருண்ட திசையில் குறட்டை ஒலி மட்டுமே தாயின் நிலையை உறுதிப்படுத்தியது. பெருமூச்சு விட்டபோது வீட்டின் மணி பன்னிரண்டானதைக் காட்டிக் கொடுத்த வேளை அவளது கண்களில் பயம் சூழந்து கொண்டது. படுக்கைக்குத் திரும்பிய வெடவெடத்த கால்கள் அதிவேகமாக கதவைத் திறந்து கொண்டு தன் புத்தகப்பையைத் தேடியது. கணிதப் பாட நூலில் ஒளித்து வைத்திருந்த வாழ்த்தட்டையை எடுத்துக் கொண்டு மீண்டும் படுக்கைக்குத் திரும்பி தலையணையின் கீழ் சொருகிக் கொண்டாள் அவள். இருளில் ஈரமாகிப் போகும் அவளது படுக்கை இன்று காய்ந்து இருந்தது.

பொழுது புலர்ந்ததும் பள்ளிக்குத் தயாரான அவள், அம்மா சற்று நகர்ந்ததும் தலையணையில் கொஞ்சம் மடங்கிப் போன‌ வாழ்த்தட்டையை கையில் ஏந்திக் கொண்டு காரில் புறப்பட்டாள்.

பள்ளிக்குச் சற்றுத் தொலைவில் வாகனத்திலிருந்து தலையை வெளியிட்டுக் கொண்டு வண்ண வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட பள்ளியைக் கண்டு இன்புற்றாள் அவள். தாய் வாகனத்தை நிறுத்தும் முன்னரே தயார் நிலைக்கு ஆளானாள். வழக்கமான தாயின் முக்தத்திற்குக் கூட காத்திராமல் வரவேற்பில் நின்றிருந்த ஆசிரியை மீனாவிடம் நீட்டினாள்.

“ தாங்க் யூ “

புன்னகையில்லாத அந்த மொழியில் அவளது முகம் மாறிப் போகும் முன்னரே அந்த வாழ்த்தட்டை சுவரில் ஐக்கியமானது.

காலணிகளைக் கழற்றிவிட்டு வகுப்பறையில் நுழைந்தாள் அவள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்