குறுங்கதை: சித்து

கழுத்தில் ஒரே இடத்தில் அடுத்தடுத்தாற் போல் மூன்று ஆழமான காயங்கள். கூர்மையான ஆயுதமாக இருந்திருக்கக் கூடும். மூன்று இஞ்ச் ஆழம் போல். மேலோட்டமான பார்வையில் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஆயுதத்தின் சுற்றளவு பத்து சென் அளவிற்காகவாவது இருந்திருக்க வேண்டும். ஆனால், இரத்த கறை இல்லை. இரத்தம் தெறித்தற்கான அடையாளமுமில்லை. அவ்விடத்தில் ஆயுதம் ஏதும் சிக்கவுமில்லை.

கை ஜாடை காட்டி மீண்டும் அந்தப் பெண்மணியை அழைத்தேன். மீண்டும் மீண்டும் அதையே ஒப்புவித்தாள். அவளது கண்களை, வாயின் அசைவை உற்று நோக்கினேன்.

“…நா…நா..நான் போறப்ப நாக்காலி விழுந்த சத்தம் கேட்டது…திரும்பி வரப்ப காலு அந்தரத்தில ஆடிக்கிட்டு ….”

வாயடைத்துப் போன அந்தப் பெண்மணி அருகிலிருந்த ஆடவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். உடலின் நடுக்கத்தைத் தவிர்க்க அந்த ஆடவன் அவளை அணைத்துக் கொண்டான்.

கழுத்துக்குக் கீழே கயிற்றின் இறுக்கம் கருமையான அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. சன்னல்கள் சிறு கம்பிகளால் ஆனது. வாசற்கதவு உடைப்படவும் இல்லை. வீட்டில் அன்று உறவினர்கள் வருகை வேறு.

வரவேற்பறைக்கு நுழைய மூன்று படிக்கட்டுகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். இரண்டாம் படிக்கட்டில் அமர்ந்தேன். தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட புடவை அங்குத் தொங்கிக் கொண்டுதான் இருந்தது. 

ஒரு ஆள் உயரத்தான் மேலிருந்த சட்டம். தடிப்பான சட்டம். ஆறு அடி தரையிலிருந்து. இறந்தவர் உயரமும் அவ்வளவு என்றுதான் தெரிந்தது. நாற்காலி ஏன்?


மீண்டும் குழம்பினேன். இன்ஸ்பெக்டர் நூராய்னி ஒரு கோப்போடு வந்தார். கோப்பிலிருந்த தகவல்கள் அதிர வைத்தன. அங்கிருந்த கட்டிலுக்கு அருகில் தடியும் பக்கவாதத்திற்கான மருந்து பொட்டலங்களையும் நோக்கினேன்.

கூடியிருந்த கூட்டத்தில் சலசலப்பு ஓயவில்லை. இறந்தவர் உடலைப் பார்த்தேன. வலது கையும் காலும் வளைந்திருந்தன. சுற்றும் முற்றும் பார்த்தேன். 

வீட்டின் வரவேற்பரைத் தாண்டி அடுத்தப் படிக்கட்டில் இரு கண்கள் ஒளிந்திருந்தன. கண் மை அப்பிய கண்கள். காந்த விழிகள். உள்ளிருந்த கருவிழிகளில் அத்தனைப் பேரழகு. இரு புருவத்திற்கும் மத்தியிலும் வட்டவடிவமான பொட்டு. என் பார்வையை உணர்ந்து அவ்வப்போது படிக்கட்டில் காணாமல் போகும் கண்கள். 

 சட்டென்று திரும்பிக் கொண்டேன்‌. ஓரக் கண்ணால் பார்த்தேன். பதுங்கி பதுங்கி படிக்கட்டை ஏந்தும் விழிகள்.
வண்டியில் ஏற்ற சடலம் தயாராகப்பட்டிருந்தது. 

மௌனத்திற்குள் ஆழ்ந்த சிந்தனையில் படிக்கட்டிலிருந்து எழுந்தேன். திரும்பிப் பார்த்தேன். அந்த விழிகளைக் காணவில்லை. சடலம் சவப்பரிசோதனைக்குப் புறப்பட்டது.
நானும் என் காரை நோக்கி விரைந்தேன். 

கொலுசொலி சத்தம் கேட்டு எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தேன். அதே கண்கள். ஓர் ஆடவனின் பின்னாலிருந்து. என் உணர்வை அறிந்திட்டு அங்கிருந்து ஓடியது. செம்மண் சாலையில் குட்டிப் பாதங்கள். கை நிறைய கண்ணாடி வளையல்கள். ஓசை ஓயும் வரை கேட்டேன்.

“ போங்க…போங்க…எல்ல கட்டியிருக்காங்க….போய் ஆக வேண்டியத பாருங்க…பாவம் பண்ணவனுக்கு திருவிழா நேரத்திலா சாவு வரணும்….”
காந்தி முருகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்