குறுங்கதை: அவள் கவனிக்கப்படுகிறாள்

தொ டர் வண்டியில் ஏறி அமர்ந்தவள் இன்னுமும் நூலை எடுத்து வாசிக்கவில்லை. மனம் அவளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள். தொடர் வண்டி பயணத்தில் அவளுக்கு விருப்பமான ஒன்று வாசிப்பு தான். அமைதியான சூழலில் எந்தவொரு தொந்தரவுமின்றி வாசிக்கத் துவங்கி விடுவாள்.
இயற்கை காற்றுக்கு வழியில்லாத கண்ணாடிகளின் வழி வெளியுலத்தை இரசித்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பாள். முதல் பக்கத்தைத் தொடர்ந்து அடுத்த பக்கத்தைத் திருப்ப விரல்கள் முனையும் முன்னரே கண்கள் கண்ணாடிக்கு அப்பால் சென்று விடும்.

தொடர் வண்டி பயணத்தில் இரசிக்கும் அந்த ஆற்று நீர் ஒரு முறை கூட வற்றியதாக அவளுக்குத் தோன்றியதில்லை. சர்ரென்று கடந்து விடும் அந்த நொடிப் பொழுதிலும் ஆற்று நீர் கடந்த கால, மறந்து போன ,தொலைந்து போன இடப்பெயர்ச்சியை நினைவுறுத்தி விடும். பெரிய ஆற்றுக்கு அருகிலிருந்த அவளது பிறப்பிடம் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும். ஆனாலும்,அவள் ஆற்றை வெறுத்ததில்லை. சிறுவர் வயதில் கழுத்தளவு நீரில் இறங்கி இரு கைகளாலும் தண்ணீரை அடித்து தெரிக்கும் நீர்த்துளிகளில் கண்களை மூடி முகத்தை நனைத்துக் கொள்வதில் பேரானந்தம்.

மலைகளைக் குடைந்து இருட்டுக்குள் அழைத்து செல்லும் ஈப்போ குகை சயாம் பர்மா கொல்லுயிர் சம்பவத்தை ஞாபகப்படுத்தி விடும். அவளுக்கு அத்துயர சம்பவத்தின் வலி வாசிப்பின் வழி மட்டுமே நிகழ்ந்திருந்தாலும் தமிழர் வரலாற்றின் கரும்புள்ளிகளை இன்னுமும் தன் மனத்தின் பாரமாக சுமந்து கொண்டிருந்தாள்.
தொடர் வண்டி பயணத்தில் மூன்று மணி நேரத்தைக் கடந்து விட்டாள். இன்னுமும் நூல் கைக்கு வரவில்லை. சிந்தனை ஒரு நிலையில் இல்லை. பழுதடைந்த காரின் மீதும், தூக்கியெறிப்பட்ட ஓர் உடலின் மீதும் அவளது கவனம் திசை மாறிக் கொண்டிருந்தது. தொடர் வண்டி தாப்பா ரோட் நிலையத்தில் வந்து நின்றது. வெறிச்சோடி கிடந்த இரயில் நிலையத்தில் ஒரு பயணி மட்டுமே இறங்கினார்.

அவரை அழைத்துச் செல்ல யாரும் வந்ததாக தெரியவில்லை. அவர் இப்பக்கம் மின்தூக்கியில் ஏறி அப்பக்கம் இறங்க வேண்டும்.எப்படி தனிமையில் அவரால் சாத்தியமாகும் என்கிற எண்ணமே அவளைத் தொடர்ந்தது.

எழுபது எண்பதுமிக்க தமிழர். கைத்தடியின் துணையுடன். தன் முன் அமர்ந்திருந்த அவர் ஒரு முறையேனும் அவளைப் பார்க்கவில்லை. தான் கொண்டு வந்த துணிப்பையை இறுகிக் கொண்டிருந்தார். 

வண்டி நிற்பதற்கு முன்னரே தட்டுத்தடுமாறி எழுந்து கதவோரம் நின்றுக் கொண்டார். அவளது கண்கள் கதவோரத்தை நோக்கியபோது கண் சிமிட்டாமல் அவளையே பார்த்தார். அவரது பார்வையில் அனல் தெறித்துக் கொண்டிருந்தது. அவளால் அவரைப் பார்க்க முடியாது கண்களை நகர்த்திய போது அவர் அவள் அருகில் அமர்ந்திருந்தார். மீண்டும் தரையைப் பார்த்தவாறு. அவளது மனம் படபடத்தது.


தாப்பா ரோட் இரயில் நிலையத்தில் இறங்கிய முதியவரைக் காணவில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்