குறுங்கதை : சொல்லி மகிழும் பொய்கள்

“ இல்லைங்க சாரு…
மவன் ஓத்துக்கிக்க மாட்டான்…அவன் சிங்கப்பூருல இருக்கான்…நான் அவன்கிட்ட பேச முடியாது….ஏசுவான்….”

இடுப்பில் சொருகி வைத்திருந்த நெகிழிப் பையிலிருந்த வெற்றிலை எடுத்து நுனிக் காம்பைக் கிள்ளி திண்ணையின் அருகே வீசினாள் ருக்கு பாட்டி. ஏற்கனவே அங்கு நான்கைந்து காய்ந்துப் போன காம்புகள் ஆங்காங்கே தெரித்துக் கிடந்தன. என் கண்கள் காம்புகளை நோக்கிய மறுகணமே ருக்கு பாட்டியை மீண்டும் பார்த்தது.

“…ம்மா…மருமக கிட்ட…”
பாட்டியின் கண்கள் அனல் தெரித்த மாதிரி உள்ளிருந்த சதைகள் வெளியே பிதுக்கிக் கொண்டு

“ ஏயா….அவகிட்ட வாயைத் கொடுத்து அவ அனுப்புற காசுல கைய வக்க சொல்றீங்களா…”

வெத்தலையை கட்டியிருந்த கைலியில் ஒருமுறை துடைத்து அதில் சுண்ணாம்பு , பாக்கை வைத்து மடித்தாள்.

“ ஐயா, நா வெறும் பொம்மதான்….என்கிட்ட பேசி என்ன செய்ய முடியும்…”


காலையிலிருந்து நான் நான்காவது வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கேன். கண்ணுக்கு எட்டிய தூரமுள்ள அந்தப் பள்ளி என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆறாக இருந்த வகுப்பறைகள் நான்காக உருவான நாளிலிருந்து என் கால்கள் ஓய்ந்தப் பாடில்லை. அலைச்சல்கள் அதிகம். பேச்சுவார்த்தைகள் அதிகம்.‌எதுவும் பயனளிப்பதாக தெரியவில்லை.
வாசலில் ஏற்றி வைத்திருந்த சீனக் கடை ஊதுவத்தி மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. 
இருள் சூழ்ந்திருந்த வீட்டின் உள்ளே சிவப்பு நிற மெழுகுவர்த்தி அந்த இருளுக்கு கொஞ்சம் ஒளியேற்றியிருந்தது.
பாட்டி எந்தவொரு சலனமுமின்றி வெற்றிலையை இடிக்கத் தொடங்கினார். உரல் சத்தம் நான் இன்னும் அந்த திண்ணையில் இருப்பதை உறுதிச் செய்தது.

“ …சாரு..இன்னொரு விஷயமும் சொல்றேன்…யார் கிட்டேயும் சொல்லாதீங்க….புள்ளைக்கு மூனு வயசா இருக்கும் போது டெங்கு காய்ச்ச வந்து ரொம்ப கஷ்டப்பட்டான்…அப்ப அவன் அம்மா …அதான் யா என் மருமவ…..சீனன் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டா….பேரனும் வெரசா குணமாகிட்டான்…”

ஊதுவத்தியின் குச்சிகளைக் கொண்டு சிவப்பு நிற ஜாடிகளில் மண்ணை நிரப்பி விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனின் முகம் மனத்திற்குள் பதிவாகிப் போனது.
இதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க மனம் இடம் கொடுக்கவில்லை. பள்ளியை நோக்கி நடந்தேன். எதிரில் ஆசிரியை ரேவதி.

“ சார்…என்னால் ஒரே நேரத்துல ரெண்டு கிளாஸ் பிள்ளைங்களுக்கு சொல்லித் தர கஷ்டமா இருக்கு… ….அதான்…பள்ளி மாற்றத்தை கேட்கலாம்னு இருக்கேன்….”
வழக்கம்போல‌ ஆசிரியை ரேவதியின் பேச்சு காதில் விழவில்லை. பாட்டியின் உரல் சத்தம் தூரத்திலிருந்து கேட்டது.

பள்ளிக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சில மாணவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
திரும்பி எஸ்டேட்டைப் பார்த்தேன். இரட்டை சடையைப் பின்னிக் கொண்ட மாணவிகளும், அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் தோளில் கையைப் போட்டுக் கொண்டு உற்சாகமாக பள்ளியை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். இடையில் ஆழமான குழி ஒன்று உருவாக்கப்பட்டிருந்ததைக் கவனிக்காமல்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்