குறுங்கதை : வெளிறு

மண்டபத்தின் வாசலில் வந்து நின்ற நிசான் சனி காரைப் பின்புறம் வரும்படி அப்பாவின் சைகையை அவ்வாகனமோட்டி புரிந்து கொண்டு நகர்ந்தார். சமையல் பக்கம் வந்த வாகனத்திலிருந்து எழுபது எண்பது வயதைக் கடந்த முதியவர்.

அப்பாவின் வாயிலிருந்து வந்த வரவேற்புரை யாவும் பகட்டு புன்னகை என உணர்ந்தவராய் முகத்தில் கட்டாயமாக ஒரு புன்னகையை விட்டிருந்தார்.அப்பா அவரது கைகயைப் பிடித்து
“சரியான நேரத்தில போன எடுத்தீங்க... ரெடியாயிகிட்டு இருக்கு... கொஞ்சம் நேரம் உட்காருங்களேன்... “

அப்பா காட்டிய வட்டவடிவமான மேசையில் அம்முதியவர் அமர்ந்தபோது என் மனம் வருந்தியது.வெள்ளை நிற தாடியுடன் முகத்தில் சுருங்கிய தோலுடன் அவர் அமர்ந்திருந்தார். உணவுகளின் பறுக்கல் மேசையின் மீது ஆங்காங்கே சிதறிக் கிடக்க இருதட்டுகளில் மீத உணவு இருந்தபடியே கிடந்தன.
அம்முதியவர் சுற்றும் முற்றும் பார்த்தார். கேத்தரிங் வேலையில் ஈடுபட்டிருந்த யையனை அழைத்தப்போது நானும் உடன் சென்றேன்.

“தம்பி, அன்னலட்சுமிய இப்படி காய விடக் கூடாது.சுத்தம் பண்ணிடு... “
“யோவ், ஒன் வேலய பாத்துக்கிட்டு போயா.... என்கிட்ட ஆர்டர் போடர வேலயெல்லாம் வேணாம்.... “
என்னைப் பார்த்ததும் அந்தப் பையன் மெதுவாக நகர்ந்தான். அப்பையனின் செயலை அம்முதியவர் பொருட்படுத்தாது சோற்றுப் பருக்கலைப் பொறுக்கி அத்தட்டுகளை எடுத்து உரிய இடத்தில் வைத்தார். அவரது முகத்திலிருந்த ஒரு நெருடல் மௌனமாய் நகர்ந்து கொண்டிருந்தது.

பொய்யான உறவுகளுக்கும், புன்னகைகளுக்கும், ஆடம்பரங்களுக்கும் மத்தியில் நடைபெறும் இன்றைய திருமண விருந்துகளில் மெய்மையான உள்ளங்களை, ஆசிர்வாதங்களையும் காண்பதரிது. அண்ணனின் திருமண வைபவம் ஒரு இலட்சத்தைத் தொட்டது.இதனால் எனக்கும் அப்பாவுக்கும் நீண்ட வாக்குவாதம் விரிசலை உண்டாக்கியது.
வந்த முதியவரிடம் ‘புங்கூஸ்’ செய்யப்பட்ட மீத உணவுகள் வழங்கப்பட்டு அந்த நிசான் சானி மங்கலம் ஆதரவற்ற இல்லத்தை நோக்கி விரைந்தது,

அப்பா எதையோ சாதித்து விட்டதாக, புண்ணியம் தேடிக் கொண்டதாக என்னைப் பார்த்து நக்கலாக சிரித்து தன் சட்டையைச் சரி செய்து கொண்டார்.
“அண்ணன் கல்யாணத்துல ஆதரவற்ற ஓம்மிலிருந்து கொழந்தைகள பெரியவங்கல கூப்டு விருந்து கொடுப்போம்.சொந்தகாரவுங்க ப்ரண்சுங்கன்னு எல்லோரையும் கூப்பிட போறோம்.இவங்களையும் கூப்பிட்டா நல்லா இருக்கும்.அவங்க முகத்தலையும் சந்தோசத்த பார்க்கலாம்.நம்மல பாத்து நாளைக்கு ரொம்ப பேரு மாறுவாங்கப்பா.. “
“கண்டவங்க வந்து தின்னனுட்டு போக நா என்ன தர்ம சத்திரமா நடத்துறன்? “



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்