குறுங்கதை : எரியும் ஓடுகள்




கசங்கியிருந்தது பள்ளிச் சீருடை.இன்னும் தாமதிக்க பூபாலனுக்கு அவகாசமில்லை. சட்டையை அவசர அவசரமாய் அணிந்து கொண்டான்.வெவ்வேறு அளவிலான இரு காலுறைகளோடு பள்ளிக்கு ஓட்டம் பிடித்தான் பூபாலன்.

அவனது மனம் படபடத்துக் கொண்டே இருந்தது.புத்தகப்பையை மேசையின் மீது வேகமாக வீசினான். அது நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேகம் சரியாகத்தான் இருந்தது.

எதிரே வந்த வைஸ்ணவியின் தோளின் மீது மோதியதைக் கூட உணராமல் மூச்சிரைக்க ஓடினான் பூபாலன்.

வரிசையின் நீளத்தைப் பார்த்ததும் பூபாலனின் முகம் மாறியது.எக்கிப் பார்த்தான்.தலையைச் சொறிந்தவாறு வயிற்றையும் தடவிக் கொண்டேன்.வரிசையிலிருந்து திரும்பி வந்த மோகனாவின் தட்டைப் பார்த்தேன்.

“பொசு பொசு”வென்று இருக்க வேண்டிய இட்லி கார வடையைத் தட்டி எண்ணெய்யில் போட்டு எடுத்த மாதிரி இருந்தது.இட்லி மேல் படர்ந்திருந்த சாம்பாரைக் கண்டதும் வயிற்றை மீண்டும் தடவி சகித்துக் கொண்டான். 

வேறு வழியின்றி கிடைத்த இரண்டு இட்லியையும் சோற்றைப் போல் பிழைந்து வாயில் அதக்கிக் கொள்ள ஆரம்பித்தான்.

“மெதுவா டா…..தொண்டயில சிக்கிக்க போது….”
“என்ன இது இன்னிக்கும் கிழிஞ்ச சட்டய தைக்கலையா…ஒரு வாரமாக சொல்லிக்கிட்டு இருக்கேன்…”

பூபாலன் தொண்டையில் இட்லி சிக்கிக் கொள்ளாமல் ஒரு வழியாய் வயிற்றுக்குள் நுழைந்து கொண்டது.ஆசிரியரின் பேச்சை விட இட்லி மீதுதான் பூபாலனின் கவனமிருந்தது.

அருகில் நின்றிருந்த பவாணி டீச்சர் பூபாலனின் அம்மாவைத் தொடர்புக் கொள்ள கைப்பேசியை எடுத்தார்.
நாளெல்லாம் பயன்பாட்டிலிருந்த கைப்பேசி தற்போது பூபாலன் அம்மாவின் தலையணை மேல் சார்ஜ்ஜாகிக் கொண்டிருந்தது அம்மாவின் குறட்டை ஒலியோடு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்