சிறுகதை :. துள்ளொலி


 

வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் என் நான்கு சக்கர அல்சாரக வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன்.அழகான காலைப் பொழுது.சூரியனைக் கண்ட மலராய்ப் பூக்கக் காத்திருக்கும் பெண்களைப் போல விடிந்தும் விடியாதது போல் ஓர் உணர்வை ஏற்படுத்தியது.சாலையில் விளக்குகள் அணைவதற்கு  ஆணைக்காகக் காத்திருந்தது போலிருந்தது.மேகத்தைப் பார்த்தேன்.இன்று மழை வருவதற்கான அறிவிப்புகள் இல்லாதது போல வானம் வெளுத்திருந்தது.

வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் என் மனத்திற்கும் உடலுக்கும் அதிவேக உணர்வுகளைச் செயலாற்றிக் கொண்டிருந்தது.செவிக்கினிய பாடலோடு மனம் லயித்துப் போனாலும் விழியின் ஓரமாய் அருகிலிருந்தவளைப் பார்த்தேன்.இரசனையற்றுக் கிடந்தாள்.அவளது செவிகள் செயலிழந்தது போல் ஒரு வினாடி மனம் சந்தேகத்திற்குள்ளானது.

கவிஞரின் வீரமான வரிகள்,பெண்ணியத்தை,தைரியத்தை  சுட்டியிழுத்த வரிகள்.பாரதிக் கண்ட புதுமைப் பெண்களுக்குத் தோள் கொடுத்த வரிகள்.

ஆணினமே உன்னை வணங்குமே…”

எழுதவித்தவன் ஆண்.கவிஞனின் பெண்ணியத்திற்குக் கிடைத்த மகா அங்கீகாரம்.பட்டித் தொட்டியெங்கும் உள்ளத்துணர்ச்சிகளைக் கிள்ளி முளைக்கச் செய்த பாடல்.ஆனால்,இவள் மட்டும் ஏன்….?

தெளிவு பெறாத கேள்விகளை மனத்தில் சுமந்து கொண்டு வாகனத்தில் பயணிப்பதென்பது அத்துனை எளிதான ஒன்றல்ல.பல அசம்பாவிதங்களுக்கு நாமே வழிவகுத்தாற்போலாகி விடும்.மனமும் மூளையும் ஒரு விடயத்திற்கான தேடலின் போது வாகனத்தைப் செலுத்துவதென்பது அபாயத்தின் அறிகுறி.ஒரு காலக்கட்டத்தில் நம்மை அறியாமலே வாகனம் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப் போகலாம்.மனம் ஒரு குரங்கென்றால் மூளை ஒரு வேதாளம்.இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பது அத்துனை சாதூர்யமானதல்ல‌.சாலையோர அறிவிப்புப் பலகை இப்போதுதான் குரூண்வட்டாரத்தில் பயணிப்பதை உறுதிச் செய்திருந்தது‌.எங்களின் குறிக்கோலிடம் இன்னும் தூரம்.எவ்வளவு நேரம் இவளது மௌனத்தைப் பொறுத்திருப்பேன்?அவளது கைவிரல்கள் மட்டும் அவ்வப்போது எதையோ எண்ணிக் கொண்டே வந்தன.சென்றடையும் நேரத்தைக் கணக்கிடுகிறாளா என்று புரியாமல் புதிராக இருந்தது.மௌனம் காத்து என்ன சாதிக்கப் போகிறாள்? நாங்கள் இருவர் மட்டுமே வாகனத்தில்.நெடுஞ்சாலையை மட்டுமே நோக்கிய அவளது கண்கள் இரசிக்க என்னதான் தேடுகின்றதோ?

மாலினி…”

என்றேன்.முதற்குரலில் காதில் விழாதவற் போலிருந்தாள்.மனம் சற்று குறுகிப் போனது.என்னை விட வேறார் அவளைப் புரிந்திடயியலும்.மீண்டும் அழைப்பதற்குள்

ம்ம்ம்என்னங்க சார்?..”

ஒன்றுமில்லையென்பதில் தலையசைத்தேன்.அவளது கண்களில் இனம் புரியாத ஒரு பிரதிபலிப்பு.உணர முடியவில்லை.அவளது கவனம் மீண்டும் நெடுஞ்சாலையின் பக்கம் திரும்பியது.

சுங்கை தெப்பி தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த நாளன்று நான் யாரென்று கூட அறிந்திராத நிலையில் லாரன்ஸ் மாஸ்டர் பாணியில் அவளது வலது கையை நெற்றிவகிட்டின் இடது பக்கம் உள்ளங்கை தெரியும்படி வைத்து வணக்கம் சார் என்று கூறியது இன்னமும் ஞாபகத்தில் வந்து செல்லும்.காந்த விழிப்பார்வையில்,குட்டையாக,இரட்டை சடையில்,முகத்தில் அப்பிய பவுடரோடு குட்டித் தேவைப் போல் காட்சியளித்தாள்.பார்த்த முதல் பார்வையிலேயே பரிட்சையுமானாள்.

நான் ஓய்வாகும் வேளையில் மாணவர்கள் திடலியிருந்தால் என் முழுக்கவனமும் அங்குதான் இருக்கும்.மாணவர்களின் விளையாட்டின் மீதான திறனை,உடல் வலிமையை,தீவிர ஈடுபாட்டைக் காணவே பல முறை தேநீர் கோப்பையுடன் என் கால்கள் திடலை நோக்கி விரைந்துள்ளன.இராமச்சந்திரன், சாந்தி,குமரேசன்,ஆறுமுகம் போன்றோரைப் போலவே நானும் விளையாட்டுத் துறையில் தடம் பதிக்க நினைத்தவன் தான்.ஆனால்,அன்று என் தந்தை சராசரி மனிதனைப் போலவே யோசிக்கச் செய்தார்.கல்வி மட்டும்தான் மனிதனை உயர்த்தி நிலைநிறுத்தி காட்டுமென்பது அன்றைய வேதவாக்கு போல் அமைந்திருந்தது.வேதனைக்குரிய இவ்விடயத்தில் என் கனவு சிதைந்து போனது.

என் எதிர்பார்ப்புகளை,தீராத ஆசைகளை எவர் மீதும் திணிக்கவில்லை.இது தேவையற்ற பல பிரச்சனைகளை உள,உடல் ரீதியாகவும் கொண்டு வந்து விடும்.சீனாவில் குழந்தைகள் மூன்று வயது முதற்கொண்டே கடுமையாக விளையாட்டுத் துறையில் தங்கள் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.நிகழ்காலம் முதற்கொண்டே பிற்காலப் வரை அவர்கள் மனோவியல் ரீதியாக பாதிக்கப்படுவதை ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.மாணவர்கள் அறியாத நிலையில் என் ஆய்வுப் பட்டியலில் பல மாணவர்களை இணைத்தேன்.அதிலும் மாலினியிடம் காணப்பட்ட ஆழ்ந்த முயற்சி, நம்பிக்கை என்னைப் பிரமிக்க வைத்தது.

எதையோ சாதித்து விட்ட ஒரு மனப்பக்குவம் மனத்தில் நிலைக்க ஆரம்பித்த போதுதான் தலைமையாசிரியரின் அறைக்குள் விளையாட்டுப் பயிற்றுனராக நுழைந்தேன்.என் வெற்றிக் கனவுகளும் ஆய்வறிக்கையும் அவர் முன் சமர்ப்பித்த அந்த கணம் மீண்டும் பிறந்தது போல் உணர்ந்தேன்.

தலைமையாசிரியர் திரு தவசேனன் என்னை மேலும் கீழும் பார்த்ததில் மனம் சற்று தள்ளாடிப் போனது.‌நீரிழிவு நோயினால் அவதியுற்று உடல் மெலிந்து கால் முட்டியில் ஏற்பட்ட வீக்கத்தினால் தாங்கித் தாங்கி நடந்து வந்து என் தோள் மீது தட்டிக் கொடுத்து

வெல்டன் பாலுஉங்கள் மாதிரி துடிப்போடு இருக்கிற டீச்சர்ஸ் இந்த மாதிரி எஸ்டேட் ஸ்கூலுக்குத் தேவை‌…”

சார்இவ்வளவு நேரம் ஆஞ்சநேயர் மந்திரத்தை சொல்லிக்கிட்டு வந்தேன்.நான் ஜெயிக்கனும் சார்எப்பவுமே என் கொற சொல்ற பானு முன்னுக்கு யென் மெடல காட்டனும் சார்…”

திடிரென மாலினியின் வீரியம் என்னைச் சுயநினைவுக்குத் திருப்பியது.அவளது அறியாமையில் என்னால் மௌனமாக புன்னகைக்க மட்டுமே முடிந்தது.‌கால்களின் வலிமையை உணராதவளா அவள்.பெண் உசேய்ன் போல்ட்.அதிவேக மின்னல் தாரகை.அவளது அறியாமையைப் பக்தி என சமாதானமாகிக் கொண்டேன்.

டாருலாமான் அரங்கத்தை வந்தடைந்ததும் ஆரம்ப காலங்களில் நான் அடைந்த ஏமாற்றங்களும் அவமானங்களும் மிஞ்சிய நாள்கள் சற்று வலியைக் கொடுத்தன.

இதுங்களா ஜெயிக்க போதுங்க….இதெல்லாம் வேலைக்கு ஆகாது…”

பெற்றோருடனான சந்திப்பில் வேலாவின் அப்பா நாகராஜனின் பேச்சு சில பெற்றோர்களை ஆமோதிக்க வைத்தது.இரும்பலான என் மனம் எதையும் கண்டு உருகிடவில்லை.பெற்றோர்களின் ஒத்துழைப்பின்மை,மாணவர்களின் பொறுப்பின்மை நான் கணித்து விட்ட ஒன்றுதான்.

என் பால்ய நண்பர் கணேசனோடு கலந்து ஆலோசித்தப் போதுதான் பிரச்சனைக்குத் தீர்வை அடைந்தேன்.பல உதவிநிதித் திட்டங்களை அவமானங்களுக்கிடையில் பெற்று உணவு,உடை,காலணி,பயிற்றுனர் வசதி அனைத்தையும் இலவசமாகக் தந்தேன்.அதன் விளைவு வருடாந்தோரமும் திடல்தட விளையாட்டுப் போட்டிக்குத் வட்டாரம்,மாநிலம், தேசியம் என் இளம் வீரர்களை வழங்கி வருகிறோம்.

வாகனத்திலிருந்து இறங்கியபோது மாலினியின் முகத்தில் உத்வேகமும் சாதிக்கும் வெறியும் தெரிந்தது.நான் பட்ட அவமானங்கள் மனத்திரையாக கண்முன் ஓடியபோது கால்கள் நகர மறுத்தன.

என்ன சார்…”

அந்த பிஞ்சுக் கைகள் என் கரங்களைப் பற்றி இழுத்து அந்த மனத்திரையைக் கிழித்தெறிந்து உள்ளே நுழைந்தது.

அரங்கமே அமைதியில் சூழ்ந்த நிலையில் களமிறங்கிய மாணவிகள் அவர்தம் ஓடும் பாதையில் வேட்டைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.நானூறு மீட்டர்.கால்கள் ஓரிடத்தில் நிலைப்பெற முடியாத நிலையில் கைவிரல்களும்ஒன்றையொன்று பின்ணிக் கொண்டு நிலைக்குத்திக். கிடந்தன.வியர்வைத் துளிகள் முகத்திலிருந்து கழுத்திலிறங்கி நெஞ்சுக்குழியில் நீரோட ஆரம்பித்ததும் சற்று நினைவு திரும்பியவனாய் விழியின் ஓரமாய் மாலினியைப் பார்த்தேன்.

என்னங்க சார்..நான் உங்க பொண்ணு..மனசுல படபடப்பு வேணாம்..போய் ரீலெக்சா உட்காருங்க..”

மாலினி தன் உள்ளத்துணர்வுகளை விழியால் மீட்டுவது இது ஒன்றும் முதல் முறையல்ல.மூன்று வருட தவம் என் செல்லப்பிள்ளைக்கு.

போட்டியின் தலைமையதிகாரி தன் பணியைச் செய்ய ஆயுத்தமானார்.துப்பாக்கிச் சூட்டின் ஒலிக் கேட்டதும்என் மின்னல் வேக தாரகை நாடிநரம்பெல்லாம் புடைத்தெடுத்தோடினாள் வெறிபிடித்தவளாய்.கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவந்தவளை அரங்கமே கைத்தட்டி வரவேற்பதைக்  கண்டு என் கால்கள் துள்ளிக் குதித்து ஓடிச் சென்று இருகைகளாலும் மாலினியைத் தூக்கி என் நெஞ்சில் அணைத்துக் கொண்டேன்,அவள் பருவமடைந்த கன்னிப் பெண் என்பதை மறந்து.

மாலினி நானூறு மீட்டரில் முந்தைய நேரப்பதிவை முறியடித்திருப்பதும் சுக்மாவிற்குத் தேர்வானதும் எல்லையற்ற மகிழ்ச்சி கண்களில் வழிந்தோடியது.அந்த கண்ணீரில் பட்ட அவமானங்களும் வலிகளும் ஓடியே போனது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்