கவிதை : மனிதநேயம்
ஓயாது ஒலித்திடும்
மரண ஓலங்கள்
யமனின் நமுட்டுச் சிரிப்பில்
மனம் ரணம் கனமாகிறது.
கொல்கலனில் பிணக் குவியல்கள்
வீதியெங்கும் மரண பீதி
ஆட்டம் காணும் நாற்காலிகள்
துருப்பிடித்த பதவிகள்.
உதவிக்கரம் பலகையில்
செல்பி வட்டங்கள் பெருகி
முகநூல் கணக்குகள் தெறித்து
அடுப்பாங்கரை பல
ஓயாது உழைக்க
வயிறுகளும் நிறைந்தன சில.
நூறு எண்களின்
ஓயாத ஓசைகள்
அழுத்தி வீங்கிட்ட விரல்கள்
கோபதாபங்களின் விரக்தி
மனம் வெளுத்து வாங்கியது
புசித்த உடலை.
வெள்ளுடை தேவதைகளின்
மூச்சை முட்டும் கவசங்கள்
தினமும் உதிர்ந்திடும் முத்துக்களில்
குளிர்காயும் அவலத்தில்
சமரசம் பேசிடும் ஒப்பந்தங்கள்.
நாளை என்றொரு விடியலில்
மனத்தில் முளைத்த ஒன்றை
கண்களில் தேடிய வண்ணம்
வீழ்ந்து வாழ்ந்து வீழ்ந்து
உயிர்ப்பித்து நிற்கிறது மனிதநேயம்.
( குறிப்பு : கெடா மாநில எழுத்தாளர் இயக்கமும், கோலா மூடா மாவட்டத்தின் தமிழ் ஆர்வலர் இயக்கமும் இணைந்து நடத்திய 'மனித நேயம்' தலைப்பிலான கவிதைப் போட்டியில் புதுக்கவிதை பிரிவில் முதல் நிலையில் வெற்றிப் பெற்ற என் கவிதை)
கருத்துகள்
கருத்துரையிடுக