குறுங்கதை : சிறையில் பூக்கும் மலர்

கண்ணாடி மேசை உடைப்படும் சத்தம் அந்த குடியிருப்புப் பகுதியில் குறைந்தது பத்து வீடுகளில் வசிப்பவர்களுக்காவது கேட்டிருக்க வேண்டும். அதுவரையிலும் மௌனத்தை உருவெடுத்து உட்கார்ந்திருந்த மதியின் காதுகளில் அச்சத்தம் செவில்களை மூடிக்கொள்ள செய்தன.

கன்னத்தின் தசைகளும் இறுகிக் கொண்டதன் விளைவாக தேக்கி வைத்திருந்த கண்ணீர் அணைக்கட்டு உடைந்தாற்போல் வீரிட்டுக் கொண்டு வந்து கன்னங்களை நனைத்து கழுத்திலோடி சட்டையை ஈரமாக்கியது.கோபத்தின் உச்சத்திலிருந்த மாறனின் கால்கள் எதையும் பொருட்படுத்தாமல் வேலியைத் தாண்டி விரைந்துக் கொண்டிருந்தன.

அப்பொழுதும் கூட மதியின் உடல் நடைப்பிணமாய் நாற்காலியில் உயிரற்றுக் கிடந்ததே தவிர அசையவில்லை. ஆனால், திடிரென அவளது கண்கள் கீழே விழுந்து கிடந்த எழுத்தாளர் அன்பழகனின் 'மதியிழந்த சமுதாயத்தின் குறைப்பாடுகள்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் மேசை உடைப்படும் முன்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சூடான தேநீரின் சிதறலால் ஈரமாவதைக் கண்டதும் வெடுக்கென்று எழுந்தாள்.நடந்த வேகத்தில் தரையில் சிதறிய கண்ணாடித் துண்டு ஒன்று பதத்தைப் பதம் பார்த்து உதிரத்தைக் கொட்டியது.

அதையும் பொருட்படுத்தாது அவளது கால்கள் அந்நூலை நோக்கி விரைந்தன. தேநீரின் நிறம் நூலின் நிறத்தை ஆங்காங்கே மாற்றிவிட்டிருந்தது. கண்ணீரால் பிசுபிசுத்துப் போன கன்னங்களைக் கூட துடைக்க மறந்த மதியின் கைகள் அந்நூலை சட்டென்று எடுத்து அணிந்திருந்த ஆடையினைக் கொண்டே ஈரத்தைத் துடைத்தாள்.

சிறுவயது முதலே எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற மதியின் இலட்சியம் குடும்பச் சூழ்நிலை காரணமாக பல முறை தடைப்பட்டுப் போனது. ஆனாலும், அவளது குறிக்கோலிலிருந்து பின்வாங்காமல்
இருந்ததற்கு ஒரே காரணம் தமிழின் மீது ஏற்பட்ட தீராத மோகமும் பற்றும்தான். 

திருமண பந்தமும் மதியின் எழுத்துலக கனவைச் சீரழிக்கவே செய்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் வாழ அவளது மனத்தில் உறுதி துளிர்விடவில்லை.திருமணமான பெண்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் மாறனைப் போன்ற ஆண்களின் ஆதிக்கம், மனப்பக்குவம் மாறும் வரை பெண்கள் செதுக்கப்பட போவதில்லை:சீரழிக்கப்பட போகிறார்கள். 

ஆக்கம் 
காந்தி முருகன் 
சுங்கைப்பட்டாணி 
கெடா. 









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

சிறுகதை : சதுரங்கம்