கனவிலிருந்து தப்பித்தவர்கள்........ வாழ்வியலின் எதார்த்தங்கள்
நூல் பார்வை : கனவிலிருந்து தப்பித்தவர்கள்.... வாழ்வியலின் எதார்த்தங்கள்
வாசிப்பு என்பது மூலதனம். நம் மூளையானது அபார சக்தியைக் கொண்டு இயங்குகிறது.நம் சிந்தனைச் சக்தியை வலுப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். அதற்கு வாசிப்பு ஒன்றே மிகச் சிறந்த தேர்வாகும்.
இல்லந்தோறும் நூலகம் வேண்டும் என்பதே அறிஞர் அண்ணாவின் இறுதி ஆசையாக அமைந்தது. வாசிப்பின் அவசியத்தையும் அதன் சுவையையும் உணர்ந்தவர்கள் அதனை சுவாசமாகத்தான் கருதுகின்றனர். அவ்வகையில் நாடறிந்த எழுத்தாளரும், ஆசிரியருமான திரு. கே. பாலமுருகன் அவர்களின் 'கனவிலிருந்து தப்பித்தவர்கள்' எனும் நூலை வாசிப்புத்தளமாகக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
இன்றைய இளம் தலைமுறையினரை மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதிகளாக உருவாக்குவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர் ஐயா கே.பாலமுருகன் அவர்கள். கனவிலிருந்து தப்பித்தவர்களில் முப்பத்தாறு குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வெழுத்து சிற்பத்தை குறுங்கதைகள் என முத்திரைப்படுத்தப்படுவது இலக்கியத்தின் வரையறைகளா அல்லது காலத்தின் தேவையா?
வார்த்தைகளின் எண்ணிக்கையை சுறுக்கி விட்டால், பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டால் கதைமாந்தர்களின் பங்களிப்பைக் குறுகிய வட்டத்திற்குள் நிலைநிறுத்திவிட்டால் அவை குறுங்கதைகள் என அழைக்கப்பட வேண்டிய அவசிய கூறுகளில்லை.
குறுங்கதைகள் எழுதப்படுவது ஒரு சவாலான விடயமாகும். அவ்வாறுக்கையில் கதையை நகர்த்த வேண்டிய சூழலில் சொற்சிக்கனம், கதைமாந்தர் பங்களிப்பு, கதைக்கரு பிசுங்காமல், குழப்பாமல், பின்னடைவு ஏற்படாமல் வாசகனைச் சிந்திக்கவும் கதையின் முடிவில் தேடலையும் உருவாக்க வைப்பதில் ஆசிரியர் கே. பாலமுருகன் எதிர்நோக்கியிருக்கக் கூடிய சவால்களை மிக துல்லியமாகக் கடந்து வந்தது பெருமைக்குரிய நெகிழ்வாகும்.
அண்மையில் திண்டுக்கல் ஜிதிஎன் கலைக்கல்லூரியும், பன்னாட்டுத் தமிழ்க்கல்வியாளர் பேரவையும் இணைந்து நடத்திய இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கில் 'மலேசிய தமிழ்க்கல்வியில் சிறுவர் சிறுகதை ஒரு பார்வை' எனும் தலைப்பில் உரையாற்றுகையில் என்னதான் கல்லூரிக் காலங்களில் மாணவர் உளவியலைப் பற்றிக் கற்றிருந்தாலும், 13ஆண்டுக்கால ஆசிரியப் பணியில் மாணவர்களோடு மாணவனாகி தன்னுள் ஒளிந்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்குள் நுழைந்து ஒன்றினைந்து போனபோதுதான் சிறுவர்களது மனநிலை,எதிர்பார்ப்பு ஆகியவற்றை உணர்ந்து சிறுவர் சிறுகதை இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு பங்காற்ற முடிந்ததாக தெரிவித்திருந்தார்.
மனிதன் சமுதாயத்தில் வெறுமனமே ஒட்டி வாழ்வதில் பயனில்லை. இந்த சமுதாயத்தில் ஒவ்வொரு நிலைப்பாடுகளிலும் தன்னைப் புகுத்தி சுயநலம் காணாமல் சமுதாயப் பார்வை எது? சிக்கல் யாவை? உளவியல் கூறுகள் யாவை? கலையப்படுவது எப்படி போன்ற அடித்தளமான விடயங்களை ஆராய்ந்தோமானால் தரமான படைப்பிலக்கியத்தை உருவாக்கிட முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.ஆசிரியருக்கு இச்சமுதாயத்தின் மீது திணிக்கப்பட்ட மாற்றங்கள் மீது ஒரு தனித்துவமான தாக்கம் உண்டு.
'எந்த சமூகம் வாசிப்பதை நிறுத்தி விடுகிறதோ அந்த சமூகம் சிந்திப்பதை நிறுத்தி விடும்' என்கிறார் சத்தியாஜித் ரே. ஆக, ஒரு சமூகத்தின் மேம்பட்ட சிந்தனைக்கும், பண்பட்ட வளர்ச்சிக்கும் வாசிப்பு ஒன்றே ஆலமரம்.
கவிக்கோ அப்துல் ரஹமான் அவர்கள் தேடல் வாழ்க்கையின் கடிவாளம். வாசிப்பு அதன் அச்சானி என்கிறார். தேடலிருக்கும் இடத்தில் உலகைப் பரந்து விரிந்து பார்க்கக் கூடிய ஆற்றல் உண்டாகும்.சமுதாயத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பலதரப்பட்ட இடர்பாடுகள், திருப்பங்கள், குற்றயுணர்ச்சிகள் ஆசிரியரின் கதைகளின் வாயிலாக வெளிப்பட்டு நம்மால் உணரப்பட முடிகிறது.
எழுத்தாளன் எனும் கர்வமில்லாமல் ஆசிரியரின் தீராத வாசிப்பு பழக்கம்தான் அறிவின் கடலைப் பெருக்கி பக்குவமடைந்த கதைச் சொல்லியாக உருவாக்கியிருக்கிறதுஎன்பது ஆணித்திரமான உண்மை.
ஒவ்வொரு கதையிலும் அதற்கான சூழல், கருப்பொருள், கதைமாந்தர் பங்களிப்பு, சமுதாய சிந்தனை என்று பல்வேறு வகையிலும் வேறுப்பட்டு நிற்கிறது கனவிலிருந்து தப்பித்தவர்கள். யதார்த்தமான விடயங்களை அதன் போக்கில் சொல்லிச் செல்வதில் எழுத்தாளர் வல்லவராகத் திகழ்வதால் நாமும் அவரது போக்கில் சென்று கதையை உள்வாங்கி அதன் தன்மையை உணர்ந்து வாசிக்கும் பொழுது கதைகள் காட்சிப்படுத்தப்பட்ட சூழல் நம் கண் முன் வந்து உயிரோட்டமாய் நிற்கிறது.
திருவிழா, சாக்லேட், கோவில் போன்ற கதைகள் உள்ளத்தில் ஆழமான பாதிப்பை விட்டுச் செல்கின்றன.வாடகை வண்டி,கூச்சல், விசாரனை, நீக்கமற நிறைதல் போன்ற கதைகள் சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றன.'வெளிச்சத்தின் நிறம் கருப்பு' இயற்கைக்கு ஒட்டிப் போகிறது. 'போர் முடிந்தது' குற்றவுணர்ச்சியில்லாமல் செயல்பட்ட மனிதனின் சுயநலத்தைக் காட்டுகிறது.
'மலாலா' கதை சுமதியைப் பற்றியதாக அமைந்தது. ஒரு கதையில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த மலாலாவின் படம் என்ன கருத்தை உணர்த்த வருகிறது? அப்படம் பேசும் மௌன மொழி என்ன? யார் அந்த மலாலா? இங்குதான் ஆரம்பமாகிறது அறிவுப் பசி. மலாலாவை பற்றிய தேடல் தொடர்கிறது. இத்தேடல்தான் எழுத்தாளனின் வெற்றியாக அமைகிறது.
கனவிலிருந்து தப்பித்தவர்களின் மொழி வளம்,சொல் வளம், கதை அமைப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.அனைவரும் படித்து புரிந்துக் கொள்ளும் பட்சத்தில் எளிமையான எழுத்து வடிவில் உள்ளது.
ஒரு புத்தகம் திறக்கப்படும் போது பல சிறைச்சாலைகள் அடைக்கப்படும் என்றார் மகாத்மா காந்தியடிகள். மாற்றம் ஒன்றே மாறாததது. எத்தனை பேர் வீட்டில் நூலகம் உண்டு?அழகுப் பொருட்களுக்கு வீட்டில் முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு புத்தகங்களுக்கு இடம் ஒதுக்குவோம். அன்று கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். இன்று பள்ளியில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்றனர். நாளைய உலகம் நூலகம் இல்லாத வீட்டில் குடியிருக்க மாட்டோம் எனக் கூறிக் கொள்ளும் நிலை உருவாக அடிக்கல் ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறது. புத்தகத்தை உற்றத் தோழனாக ஏற்றுக் கொண்டால் அறிவின் எல்லையை நெருங்கிக் கொண்டே இருப்போம்.
மலேசிய சூழலைப் பிரதிபலிக்கும் படைப்பிலக்கியத்தை வழங்கி வரும் ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
வாசிப்பே நம் சுவாசிப்பு.
எழுத்து
கருத்துகள்
கருத்துரையிடுக