சமுதாய பார்வை : கொரோனா காலத்து அம்புலிமாமா...
கோறனி நச்சில் காரணமாக உலகமே இருண்டு போனது. அடுப்பாங்கரை முதல் உலக வாணிகம் வரை சந்தித்த மாற்றங்கள் எண்ணில் அடங்கா. மனித மனங்களின் உள்ளுணர்வு முதற்கொண்டு இயற்கைத் தாயின் படைப்புகள் வரை நாம் பல விதங்களில் புதிய பரிமாணத்தைச் சந்தித்து விட்டோம்.
கல்வி நிலையைப் பொறுத்தமட்டில் மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்யயிலாதொன்று. இருப்பினும், நம் கல்விமான்கள் முகநூல், புலனம், இயங்கலை வகுப்புகள் என அயராது உழைத்துக் கொண்டு மாணவர்களுக்குக் கல்வியை வழங்குவதில் ஒருவரையொருவர் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர்.
போற்றப்படுவது வேண்டிய இவர்களுள் நாடறிந்த எழுத்தாளரும், ஆசிரியரும் திரு கே. பாலமுருகன் அவர்கள் தனிச்சிறப்பெற்றுத் திகழ்கிறார். மலேசிய தமிழ் மொழி விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்தின் தலைவரும் இவராவார்.நடமாடும் கட்டுபாட்டு ஆணை பிறப்பிக்கும் முன்னரே இவரது விடுமுறை கால செயல்பாட்டுத்திட்டங்கள் தொடங்கிவிட்டன எனலாம்.
இளம் எழுத்தாளர்களை உருவாக்குவதுதான் ஆசிரியர் பாலமுருகனின் தலையாய குறிக்கோளாகும்.மார்ச் மாதத்தில் கோலாலம்பூரில் நடைப்பெறவிருந்த இரண்டாவது தேசிய அளவிலான சிறுவர் சிறுகதை இலக்கிய விழா இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கோவிட் 19 நாட்டை வந்தடைந்த காலக்கட்டமது.மாணவர்களின் நலன் கருதியும், இயற்கை சீற்றத்திலிருந்து விடுபடவும் ஆசிரியர் எடுத்த முடிவு நற்பயனையே அளித்துள்ளது.
ஆசிரியர் பாலமுருகனை 'கொரோனா காலத்து அம்புலிமாமா' என்றுதான் செல்லமாய் அழைத்திட வேண்டும். இக்காலகட்டத்தில் அவரது சேவை பாராட்டுக்குரியது. குறுங்கதைகளாக கொரோனாவும் மாரிமுத்துவும், கொரோனாவும் தாதியர் அம்பிகாவும், கொரோனாவும் மணிகண்டனும், கொரொனாவும் தேசத்தின் எல்லைகளும் மக்களிடையே பாராட்டுப் பெற்றவையாகும்.' கொரோனாவும் தேசத்தின் எல்லைகளும்' பலரையும் கண்கலங்க வைத்தது.அவரது இம்முயற்சி இளம் தலைமுறையினரையும் சுயமாக குறுங்கதை எழுத வைத்தது எதிர்பாராத ஒரு திருப்பமாகும்.மனிதர்களின் உள்ளுணர்வின் வலிகளை இக்குறுங்கதைகள் வெளிக்கொணர்ந்தன. ஆசிரியர் எழுதிய 'கொரோனாவின் சர்வதேச சதி' எனும் கவிதை வரிகளும், அவரது குரலில் தென்பட்ட மனவேதனைகளும் அவர் சமுதாயப்பற்றாளன் என்பதை நிரூபித்துள்ளது. 'கொரோனாவும் எறும்புண்ணியும் ஓர் இயற்கையின் சீற்றம்' எனும் கட்டுரை காலத்தின் தேவைக்கேற்ப மனிதனின் இரக்கமற்ற செயல்பாடுகளால் விளைந்த தாக்கத்தை எடுத்துரைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது.மேலும்,கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தன் முகநூலிலும் வலையொளி தளத்திலும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுமுறை காலத்திற்காக மலேசிய தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்தின் சார்பாக மாணவர்களுக்கு பயிற்சிகள் பல இலவசமாக வழங்கினார்.இச்சூழலில் பல ஆசிரியர்களும் அவருக்குத் தோள் கொடுத்தனர்.
நடமாடும் கட்டுபாட்டு ஆணை நடைமுறையில் தொடர்ந்திருப்பதால் ஆசிரியர் பாலமுருகன் 'Tamil Education Of Primary SJKT' எனும் புதிய முகநூலையும் தனது பாலமுருகன் எனும் வலையொளி தளத்தை தமிழ் மொழி கற்றல் தளமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் வழி பல போட்டிகள், ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கை அவ்வப்போது இடம்பெற்று வருகிறது.
மாணவர்களை இளம் இயக்குனர்களாக உருவாக்கி வரும் பெருமை ஆசிரியர் பாலாவை சாரும். மாணவர்களுக்கான குறும்பட போட்டியில் அவர்கள் நாளைய இயக்குநர்கள் என்பது வெளிப்பட்ட உண்மையாகும்.'Last Day of Self Quarantine' குறும்படம் ஆசிரியரின் தனித்தன்மை வாய்ந்த நடிப்பு கண்களில் நீரோட வைத்தது. கொரோனா விழிப்புணர்வு பாடல் போட்டியில் மாணவர்களின் குரல்வளமும் கை வண்ணமும் பிரமிக்க வைத்தது.
மெலாந்தி பள்ளத்தாக்கு தொடர்கதையைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குச்சி மிட்டாய், சரவணன், தனசேகர், மூர்த்தி, சுப்பம்மாள், சிறுமி, தெய்வீகன் என மறக்கயியலாத கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தினார்.மெலாந்தி பள்ளத்தாக்கு தொடர் சிறுவர்களுக்கான தொடர் என்பதனை ஒவ்வொரு நாளும் நினைவறுத்தியும் பெற்றோர்கள் வழிக்காட்டலோடு வாசிக்கலாம் என்பதை நினைவுறுத்தினார். 13 நாள் படிப்பினை மிகுந்த
தொடராக எங்களை வாசிக்க வைத்து அதன் முடிவினை எழுதும் வாய்ப்பை வாசகர்களிடையே விட்டார்.அதோடு, ஆசிரியர்களுக்கான ஒரு பக்கம் கதை எழுதும் போட்டியை அறிவித்த ஆசிரியர் பாலமுருகன் அதில் வெற்றியும் கண்டார்.
ஆசிரியர் பாலமுருகன் தன் ஒவ்வொரு முயற்சிக்கும் வெற்றிக்கும் பின்னால் ஓய்வெடுக்கவில்லை.மாறாக அடுத்தடுத்த திட்டங்களுக்கு வழிவகுத்து கொண்டேயிருக்கிறார். அவரது மிக புதிய பரிமாணம் இரட்டையர் வேடத்தில் கல்வி கற்பித்தல் முறை மாணவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.அதோடு,கைப்பாவையின் வழி கதைச் சொல்லிக் உருவாக்கியிருப்பது தமிழ் மொழி யின் மிகச் சிறந்த வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஆசிரியர் பாலமுருகனின் புதிய கோணத்தின்
புதிய முயற்சிகள் ஓய்ந்துவிட போவதில்லை. நம் மாணவர்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டு தான் இருப்பார். அவரது சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஒரு சில எதிர்ப்புகள் இருந்தாலும் அதைக் கண்டு அஞ்சாத தனிக் காட்டு ராஜாதான்.
இவ்வாண்டின் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் பாலமுருகனின் சேவையை நினைவு கூறுவோம்.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
ஆக்கம்
காந்தி முருகன்
கருத்துகள்
கருத்துரையிடுக