சிறுகதை : சதுரங்கம்
“ எத்தன தடவ சொல்லிட்டேன் … யெடத்தை மாத்துனு … ஒன் மர மண்டையில எங்காவது ஏறுதா …” சரசு வாயிலிருந்து வார்த்தைகள் தினமும் கேட்கிற ஒன்றுதான் என்பதை அறிந்தவனாக காதில் விழுந்தவற்றில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தன் ஹோண்டா மோட்டாரை மண் சாலையில் செலுத்திக் கொண்டிருந்தான் ஆதி . பத்து வருட பயன்பாட்டில் இருந்திருக்கக் கூடிய மோட்டார் அது . உரியரிடமிருந்திருந்தால் இன்னும் கொஞ்ச காலத்திற்கு உழைக்கும் . “ ச்சே …” மோட்டார் கொஞ்சம் ஆட்டங்காணவே அதன் தலையில் உள்ளங்கையால் தட்டினான் . இரு விரல்களுக்கு நடுவிலிருந்த சிகரெட்டிலிருந்து புதைந்து கொண்டிருந்த தழல்கள் சட்டென்று மாயமாய் மறைந்தன . “ யோவ் , காதுல விழுந்தாலும் கேட்காதவன் போல நல்லாவே நடி …” என்றவள் கையால் அவனது தலைக்கவசத்தில் தட்டினாள் . மனத்திற்குள் “ எடுப்பட்ட நாயே … நாசமா போறவனே …” என்று முணுமுணுக்கவும் செய்தாள் சரசு . தலைக் கவசத்தில் விழுந்த அடி சுர்ரென்று ஆதிக்குத் தலைக்கேறியது . ஆனாலும் , அக்கோபத்தை அடக்கியவாறு கும்மிருட்டு சூழ்ந்திருந்த அந்தப் பாதையில் கண்களை உருட்டித் திரட்டி வாகனத்தைச் செலுத்திக்...